என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள்: அரசுப் பள்ளி ஆசிரியரின் பகிர்வு

தன் மாணவர்களுடன் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன்.
தன் மாணவர்களுடன் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன்.
Updated on
3 min read

ராமநாதபுரம், நரசிங்கக்கூட்டம் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன். முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊரான ராமநாதபுரம், எக்கக்குடி நடுநிலைப்பள்ளியில் அதிக அளவில் முஸ்லிம் பெண் குழந்தைகள் படிக்கக் காரணமாக இருந்தவர். கணிசமான தனது பங்களிப்புடன் ஆண்டுதோறும் கல்விச் சீர் விழாவை நடத்துபவர். பனை ஓலை பொருட்கள், பறவை மேடை என இயற்கையோடு இணைந்து மாணவர்களைப் பயணிக்க வைப்பவர், மாணவர்களுக்குத் தினம் ஒரு பழம், சத்தான சிற்றுண்டிகளைத் தனது செலவில் அளித்து வருபவர்.

ஆசிரியப் பணியில் ஓடிக்கொண்டே இருந்ததால் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை என்னும் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் தன்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் குறித்துப் பகிர்கிறார்.

கரடுமுரடான பாறையைச் சிற்பி தன் சிறு உளியால் செதுக்கி அழகான சிற்பத்தை வெளிக்கொணர்வது போல், குயவன் தட்டித் தட்டி மண்பாண்டத்தை அழகாக்குவது போல், எந்த வடிவமுமின்றி களிமண்ணாக இருக்கும் குழந்தைகளை வைரமாய் ஜொலிக்க வைத்து அழகு பார்ப்பவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வகையில் மாணவர்களைச் செதுக்குகிறார்கள். அப்படி என்னைச் செதுக்கிய சிலரைப் பற்றி இந்த ஆசிரியர் தினத்தில் நினைவு கூர்கிறேன்.

ஆசிரியருக்கான முன்னுதாரணம்: ஆசிரியர் கோட்டாளமுத்து

ஓர் ஆசிரியரின் நடை, உடை, செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு முதன்முதலில் உணர்த்தியவர் ஆசிரியர் கோட்டாளமுத்து . வேம்பார் TNDTA தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர். எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். மாணவர்கள் எழுதும் எழுத்தும் வரையும் ஓவியமும் சிறப்பாக இருப்பதன் மூல காரணமாக இருப்பார். ஒவ்வொரு பள்ளிப் பதிவேடுகளையும் அவ்வளவு அழகாகப் பராமரிப்பார். வெவ்வேறு வண்ணப் பேனாக்களைக் கொண்டு எழுதி அலங்கரிப்பார். ஒவ்வொரு விழாக்களையும் சிறப்பாகக் கொண்டாடுவார். தலைமையாசிரியர் அறைதான் எங்கள் வகுப்பறை. இன்று நான் தலைமையாசிரியாகச் செய்யும் செயல்களின் முன்னோடி அவரே.

தமிழ் அமுதூட்டியவர்: ஆசிரியை பிளாரன்ஸ் விமலா

நான் இடைநிலைக் கல்வி பயின்ற வேம்பார் புனித பீட்டர் நடுநிலைப் பள்ளியின் தமிழாசிரியை. தமிழை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர். மாணவர்கள் மேடையில் பிறர் ரசிக்கும்படி பேசவும் கதை, கவிதை, கட்டுரை எழுதவும் விதை போட்டவர். அன்னையைப் போலப் பாசம் காட்டி, தமிழ் அமுதூட்டி வளர்த்தவர். இனிமையாகக் கற்பிப்பார். இப்படிப்பட்ட தமிழாசிரியர் ஒரு மாணவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் நிச்சயம் இலக்கிய உலகில் பிரகாசிப்பான்.

ஆங்கிலத்தின் மீது வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர்: ஆசிரியர் நெல்சன்

நான் மேல்நிலைக் கல்வி பயின்ற பாரம்பரியம் மிக்க தூத்துக்குடி கால்டுவெல் மேனிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர். நுனிநாக்கு ஆங்கிலம் பேசக்கூடியவர். ஆங்கிலேயர்கள் கூட இவர்போல் ஆங்கிலம் பேச முடியாது எனச் சொல்லுவோம். என்னைப் போன்ற கிராமப்புறத்தில் இருந்து சென்ற மாணவர்கள் ஆங்கில வாசிப்பைக் கண்டு பயப்படும்போது தட்டிக் கொடுத்துத் தன்னம்பிக்கை ஊட்டுவார். நோட்ஸைப் பார்த்துப் படித்தபிறகு, பதில் எழுதுவதை விரும்பாதவர். சொந்த நடையில் எழுத வேண்டும் என்பார்.

பல முறை எனது பேப்பரைக் காட்டி "பாருங்கடா... வள்ளுவன் சொந்தமா எழுதியிருக்கான்" எனப் பாராட்டுவார். வரிக்கு வரி எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இருக்கும். ஆனாலும் அதையும் பாராட்டி உற்சாகமூட்டும் பண்பாளர். ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் படிக்கத் தருவார். அதை நாமே வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தின் மீது வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர். மறக்க முடியாத ஆங்கில ஆசான் நெல்சன் சார்.

கணக்கைக் கற்கண்டாகக் கற்பித்தவர்: முதல்வர் பெஞ்சமின் ராஜபால்

படிக்கும்போது மிகக் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கும் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, தனது கற்பித்தலால் புரிய வைத்த பேராசான். அதிர்ந்து பேசாதவர். கோபம் என்பதை அறியாதவர். ஆங்கிலத்தையும் கணிதத்தையும் கற்கண்டாகக் கற்பித்தவர்.

மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கச் செல்லும்போது முன்தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்துவார். கணிதத்தைக் கரும்பலகையில் மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது ஆசிரியருக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது. சிறிய கணக்கு என்றாலும் நாம் முதலில் செய்து பார்த்துவிட்டுத்தான் கரும்பலகையில் கற்பிக்க வேண்டும் என்பார்.

ஒரு சிறிய நிகழ்வு என்றாலும் அதற்கான திட்டமிடல் அதிகம் இருக்க வேண்டும் என்பவர். ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் முழுமையாக அறிந்து வைத்துக்கொண்டு அவனுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் செய்வார். பதின்வயது மாணவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்கள் 40 பேர். இரண்டாமாண்டு மாணவர்கள் 40 பேர் என 80 மாணவர்களையும் அவர் கையாளும் விதமே தனி.

விதைப்பதுதான் முளைக்கும். ஆசிரியர்கள் கற்பிப்பதுதான் மாணவர்கள் மனதில் நிலைக்கும். என்னிடம் இருக்கும் திறமைகளுக்கும் நற்பண்புகளுக்கும் என்னைச் செதுக்கிய இந்தச் சிற்பிகளே சொந்தக்காரர்கள். என் ஆசான்கள் எனக்குக் கற்றுக்கொடுத்ததை நான் என் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். அதனால் புகழடைகிறேன். என் மாணவர்களும் புகழ் பெறுவார்கள். இந்த நல்லாசான்களின் புகழை நாளும் பாடுவேன். அவர்களின் ஆசீர்வாதத்தால் இன்னும் உச்சம் தொடுவேன்.

- அரசுப் பள்ளி ஆசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in