தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உள்ளிட்டோருக்கு ஆஜராக சட்ட உதவி மைய வழக்கறிஞர் நியமனம்

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உள்ளிட்டோருக்கு ஆஜராக சட்ட உதவி மைய வழக்கறிஞர் நியமனம்
Updated on
1 min read

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் அட்டாக் பாண்டி உட்பட 15 பேரின் வழக்கறிஞர்கள் விலகியதையடுத்து, அவர்கள் சார்பில் ஆஜராக இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை செப்.21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வினோத், கோபி, முத்துராமலிங்கம் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ போலீஸார் விசாரித்து அட்டாக் பாண்டி, டி.எஸ்.பி. ராஜாராம் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்தது. அட்டாக் பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து 9.12.2009-ல் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, அட்டாக் பாண்டி உட்பட 17 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி வினோத் தாயார் பூங்கொடி என்பவர் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்கள் அட்டாக் பாண்டி உட்பட 15 பேரின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த 15 பேர் சார்பில் ஆஜராக இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து வழக்கறிஞரை நியமனம் செய்யுமாறு உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்டாக் பாண்டி உட்பட 15 பேருக்காக இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் என்.ஆனந்தகுமார் ஆஜரானார். 16-வது எதிர்மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தீபக், 17-வது எதிர்மனுதாரரான டி.எஸ்.பி. ராஜாராம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகினர். இவர்கள் விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டதால் செப்.21-ம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in