

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடர்ந்து 3 மணி நேரம் கனமழை பெயத்தது. இன்று காலை 8 மணி நிலவரப்பட்டி 135.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் உத்தப்ப நாயக்கணூர், தொட்டப்ப நாயக்கணூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
பல ஆண்டுகளுக்கு பின் பெய்த கனமழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்று காலை 8 மணி நிலவரப்பட்டி 135.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது தமிழகத்திலேயே அதிகபட்டசமான மழைப்பதிவு.
இந்த மழையால் உசிலம்பட்டியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருப்போர் கடும் அவதிகுள்ளாகினர்.
மேலும், நகரின் பல பகுதிகளிலும் கழிவுநீர் வடிகால்களை தூர்வாராமல் இருந்ததன் காரணமாக ஆங்காங்கே மழை நீர் கழிவு நீருடன் கலந்தோடி மக்களை அசவுகரியத்துக்கு உள்ளாக்கியது.
இதேபோல் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததால் மல்லிகை, கத்திரி போன்ற பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.