

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச் சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் தொட்டம் பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அண்மையில் பாஜகவில் இணைந்த நிலையில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பின் முதல் முறையாக சொந்த ஊரான தொட்டம்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்த அண்ணாமலைக்கு கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட எல்லையான வைரமடையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 2021-ம் ஆண்டு தேர்தலில் இது அனைவருக்கும் தெரியவரும். கரூர் மாவட்டத்தில் பாஜக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் கரூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெறும்.
பிரதமர் மோடியின் சிறப்பான அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களையும் சென்றடையும்படி செயல்படுவோம். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக ஆரோக்கியமாக, மிக அற்புதமாக வளர்ந்து வருகிறது என்றார்.