

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் செயல்படும் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சிக்கு சொந்தமான 7.4 ஏக்கர்பரப்பில் தினசரி மற்றும் வாரச் சந்தை இயங்கிவருகிறது. திங்கள்கிழமைதோறும் நடைபெறும் வாரச் சந்தையில் நூற்றுக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் மற்றும் சமையல் பொருட்களை விற்கின்றனர். இதனால், உடுமலை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாரச் சந்தைக்கு வருகின்றனர். இதன் மூலம் நகராட்சிக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. எனினும், வாரச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் காய்கறிகள், சேறும், சகதியும் நிறைந்த இடத்தில், சுகாதாரச் சீர்கேட்டுக்கு நடுவே விற்கப்படுகின்றன. சந்தை வளாகத்தில் மாட்டிறைச்சி, மீன், கோழி இறைச்சிக் கடைகள் அதிக அளவில் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் சந்தை வளாகத்திலேயே கொட்டப்படுவதால், சந்தைக்குள் செல்லவே மக்கள் அச்சப்படும் நிலையில் உள்ளனர். எனவே, இறைச்சிக் கடைகளை நகராட்சி எல்லைப் பகுதிக்கு மாற்றவேண்டும். சந்தை வளாகத்தை, காய்கறி விற்பனைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்’’ என்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறும்போது, ‘‘ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சந்தைப் பகுதியில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்துதரப்படவில்லை. இது தொடர்பாக அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே இடப்பற்றாக்குறை நிலவும் சூழலில், சந்தை வளாகத்தில் உரக்கிடங்குக்காக இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘இதுகுறித்து நகராட்சி ஆணையரின்கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்
சேறும், சகதியுமான சந்தை வளாகம்
உடுமலை வாரச் சந்தை வியாபாரிகள் கூறும் போது, ‘‘தினசரி சந்தைக்கு அதிகமானோர் வந்தாலும், வாரச் சந்தையன்று மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சந்தைக்கு வருகின்றன. சந்தையின் பல பகுதிகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், மழைக் காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், சந்தை வளாகத்தில் கடைகள் கட்டப்படாததால் திறந்த வெளியில் காய்கறிகளை விற்கும் அவலமும் உள்ளது. மீதமான அல்லது கெட்டுப் போன காய்கறிகளைக் கொட்ட குப்பைத் தொட்டிகள் இல்லை. திறந்த வெளியில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகள் பல நாட்களானாலும் அகற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது’’ என்றனர்.