Published : 05 Sep 2020 11:59 AM
Last Updated : 05 Sep 2020 11:59 AM

சென்னை பெருநகருக்கான தூயக் காற்று செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி கடிதம்

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

சென்னை பெருநகருக்கான தூயக் காற்று செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (செப். 5) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:

"தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்வதற்காகவும், அனைவருக்கும் தூயக் காற்று கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் உயிரிழக்கும் 8 பேரில் ஒருவர் காற்று மாசுபாடு காரணமாக இறக்கிறார்.

ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களைக் காற்று மாசுபாடு உருவாக்குகிறது. 43% நுரையீரல் நோய்களுக்கும், 27% நுரையீரல் 24% பக்கவாத பாதிப்புக்கும், 25% இதய நோய் பாதிப்புக்கும் காற்று மாசுபாடு காரணம்.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்நாளில் இரண்டரை ஆண்டுகள் காற்று மாசுபாட்டால் குறைகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில் வாழும் எல்லா மக்களையும், குறிப்பாக குழந்தைகளைக் காற்று மாசுபாடு கடுமையாகப் பாதிக்கிறது.

ஒரு கனமீட்டர் காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 100 மடங்கு அதிகமாக உள்ளது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும்.

சென்னையில் கடந்த ஆண்டில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு 300 அளவைக் கடந்து 450 எனும் அபாய அளவை எட்டியது. கொடுங்கையூரில் உச்சமாக 935 எனும் அளவினை எட்டியது. இதை உடனடியாக இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை. அதனால், இதை இந்தியாவில் முதல் கட்டமாக 35 எனும் அளவுக்குள் குறைக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசு 40 மைக்ரோகிராம் என்பதை உச்ச அளவாக அறிவித்துள்ளது.

கரோனா ஊரடங்குக்கு முன்பு, சென்னையில் ஆண்டுக்கு 100 நாட்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலையில் மக்கள் வாழ்ந்தனர். சென்னை மாநகரின் காற்று மாசு அளவு, மணலி காற்று மாசு கண்காணிப்புக் கருவி பதிவுகள்படி, கடந்த நவம்பர் 5 வரையிலான 365 நாட்களில், 119 நாட்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்துள்ளது.

சென்னையின் 15 இடங்களில் பொது அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து இடங்களிலுமே 70 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் 187 மைக்ரோ கிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் மக்கள் சுவாசிக்கும் காற்று ஆபத்தாகவே உள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருந்தது. ஆனால், இதற்காக மக்கள் கொடுத்துள்ள விலை மிக அதிகம். மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகளைச் சந்தித்துதான் இந்த நிலையை எட்டியுள்ளோம். இது வரவேற்கத்தக்க மாற்றம் இல்லை. மாறாக, பொருளாதார இழப்புகள் இல்லாமலேயே தூயக் காற்றை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளும் தொழில்நுட்பங்களும் உள்ளன. அவை சாத்தியமானவை தான்.

கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கட்டுள்ள நிலையில், காற்று மாசுபாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் காற்று மாசுபாட்டைத் தடுக்கத் திட்டமிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சென்னை மக்களுக்குத் தூய சுவாசக்காற்றை அளிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்களின் வாழ்நாளை அதிகரிக்க முடியும். மேலும், புவி வெப்பமடையக் காரணமான பசுங்குடில் வாயுக்களைக் குறைக்கவும் முடியும்.

தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய அரசு 10.01.2019 ஆம் நாள் தேசிய தூயக் காற்று திட்டத்தை அறிவித்தது.

ஆனால், சென்னை அத்திட்டத்தில் இல்லை. மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல், தமிழ்நாடு அரசே சென்னை பெருநகருக்கான தூயக் காற்று செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்கி, அதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, சென்னை மாநகர மக்களின் தூயக் காற்றுக்கான அடிப்படை மனித உரிமையைக் காப்பாற்ற வேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கான அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

செப்டம்பர் 7 ஆம் நாள், 'நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்' (International Day of Clean Air for blue skies) என ஐ.நா. சபையால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக முதல்வராகிய தாங்கள் அறிவிக்க வேண்டும். குறிப்பாக, சென்னை பெருநகருக்கான தூயக் காற்று செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x