

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (எ) டாக்டர் வீ.ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ல் திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி கிராமத்தில், வீராசாமி-சீத்தம்மா தம்பதிக்குப் பிறந்தார்.
ஏழ்மையான சூழலிலும், கல்வியின் மீது ஆர்வம்கொண்ட இவர், உதவித்தொகைகள் மூலம் கல்வியை கற்றார்.
முதுகலை பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், 1962 மே 13-ம் தேதி முதல் 1967 மே 13-ம் தேதி வரை இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்தார். ஆனாலும், ஆசிரியராகவே அதிக அளவில் அவர் அறியப்பட்டார்.
அவரது ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர். அவரது குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்தபிறகு, 1967 செப். 9-ம் தேதி மத்திய அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு கவுரவித்தது.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் ஹரிஹரன் கூறும்போது, "1967-ல் அவரது 80-வது பிறந்த நாளில், 15 பைசா அஞ்சல்தலையுடன் கூடிய சிறப்பு அஞ்சல் உறையை மத்திய அரசு வெளியிட்டது. அன்று நாடு முழுவதுமுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
"வறுமையைப் போக்குவதும், அனைவருக்கும் சமமான உரிமையைப் பெற்றுத் தருவதும் ஓர் அறிவாளியின் பணி" என்ற அவரது கருத்து அஞ்சல் உறையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையில், அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இதை தற்போதும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர். அவரது பிறந்த நாளான இன்று இதை நினைவுகூர்வது சிறப்புக்குரியது" என்றார்.