

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால் வாகனப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு கூறும்போது, ‘‘வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதால், விபத்து மற்றும் நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம். லாரிகள் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மாநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வரும் லாரிகள் குறிப்பிட்ட நேரம் முடியும் வரை ஓரமாக நிறுத்தப்படுகின்றன. அபராதமும் விதிக்கப்படுகிறது.
பாலசுந்தரம் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எப்.சி புதுப்பிக்க வரும் வாகனங்கள் நீண்ட தூரம் சாலைகளில் நிறுத்தப்படுவதாலும், ஓட்டுநர் பயிற்சி வாகனஙகள் சாலைகளில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து பாலசுந்தரம் சாலையில் வாகனங்களை நிறுத்தவிடக்கூடாது என ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.