

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 5) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை உடல் நலக்குறைவால் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரமிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவுக்குத் திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார், அண்ணா, கருணாநிதியுடன் பணியாற்றி, திராவிட இயக்கக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அவர் திமுக வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். தென்னிந்தியத் திருச்சபையில் திருநெல்வேலி, தூத்துக்குடி டயோசிசனில் சிறப்பு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு 11 முறை வெற்றி பெற்றவர். சிறுபான்மையின மக்களின் நலனுக்காக மட்டுமின்றி, தூத்துக்குடி வாழ் மக்கள் அனைவருக்குமே மனிதநேயமிக்க சேவகராக விளங்கிய நாசரேத் பி.துரைராஜ், கருணாநிதியால் 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தான்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.
மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக வைகோவுக்கு வலது கரமாக விளங்கிய அவர் திராவிட இயக்கம் உருவாக்கிய கண்மணிகளில் ஒருவராகப் பொதுவாழ்வில் பிரகாசித்தவர். அவரது மறைவு, மதிமுகவுக்கு மட்டுமின்றி, திராவிடப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் வைகோவுக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.