Published : 05 Sep 2020 10:04 AM
Last Updated : 05 Sep 2020 10:04 AM

உரிமைக்காகப் போராடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி; அவரது நினைவை நெஞ்சில் ஏந்திப்  போற்றுவோம்; ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 5) வெளியிட்ட அறிக்கை:

"இந்திய நாட்டுப்பற்றுக்கும், விடுதலை வேள்வித் தியாகத்துக்கும், வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குணத்துக்கும், அடக்குமுறைக்கு அஞ்சாமைக்கும், அயராத உழைப்புக்கும் அரிய உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார்.

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் தீரர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் செப்டம்பர் 5. அடுத்த ஆண்டு 150-வது பிறந்தநாள் வர இருக்கிறது. 150 ஆண்டுகள் தொடும் நிலையிலும் வ.உ.சி. இன்றும் நம் நெஞ்சில் நிறைந்து வாழும் மாபெரும் மனிதராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் செய்த மறக்கவியலாத தியாகங்கள் தான்.

உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் தருவதுதான் தியாகத்தின் அடையாளமாகச் சொல்லப்படும். உண்மையில் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் வ.உ.சிதம்பரனார்.

1894-ம் ஆண்டில் தனது தேர்ந்த சட்டத் திறமையால் தென்மாவட்டத்தில் வசதி மிகுந்த வழக்கறிஞராக வலம் வந்த வ.உ.சிதம்பரனார், வெள்ளையர் அரசின் கொடும் துரைத்தனத்தின் காரணமாகக் கொதித்தெழுந்து அவர்களது ஏகாதிபத்திய எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக இடி முழக்கம் போலப் போர்க்குரல் எழுப்பினார்.

பிரிட்டிஷ் அரசை, அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை விட, பொருளாதாரரீதியாக எதிர்கொள்வதே சரியானது என்ற ஆழ்ந்த சிந்தனை வ.உ.சிதம்பரனாருக்கே முதன்முதலில் வந்தது. ’சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற சுதேசிய கப்பல் நிறுவனத்தை உருவாக்கி பிரிட்டிஷ் அரசின் கப்பல் வணிகத்தின் பொருளாதாரச் செல்வாக்குக்கு, மிகப் பெரிய சவாலாக இருந்தார் சிதம்பரனார்.

தென்மாவட்டத்தைப் பார்த்தாலே வெள்ளையர் ஆட்சி மருளக்கூடிய அளவுக்கு அப்பகுதியைக் கொந்தளிக்கும் பூமியாக மாற்றினார். அதனாலேயே வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் 1908-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை ஒட்டி, நாடு முழுவதும் பொதுமக்கள் மாபெரும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்; தென்மாவட்டமே கொந்தளித்தது.

வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதனை ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தது. 1908 முதல் 1912 வரை பல்வேறு சிறைகளில் சித்ரவதை அனுபவித்தார் சிதம்பரனார்.

சிறையில் இருந்து வெளியில் வந்தபிறகும், முன்பை விட அதிகமான போராட்டக் குணத்தோடு இந்நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை உறுதி குறையாது போராடினார். உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகும், வறுமை சூழ்ந்த நிலையிலும், தனது நாட்டுப்பற்றையும் போராட்டக் குணத்தையும் விடாமல் வாழ்ந்து மறைந்தார்.

இந்திய நாட்டு விடுதலைக்காக மட்டுமல்ல, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டும் மகத்தானது. சிறையில் அடைக்கப்பட்ட காலம் தொடங்கி இறுதிவரை தமிழுக்கு ஏராளமான நூல்களை எழுதிக் குவித்த மாபெரும் தமிழ்ப்புலவர் வ.உ.சிதம்பரனார். மனம்போல்வாழ்வு, மெய்யறிவு, மெய்யறம், பாடற்றிரட்டு, இன்னிலை, திருக்குறள் மணக்குடவர் உரை பதிப்பித்தல், தொல்காப்பியம் இளம்பூரணர் உரை பதிப்பு, எழுத்ததிகாரப் பதிப்பு, பொருளதிகாரப் பதிப்பு, சாந்திக்கு மார்க்கம், சிவஞான போத உரை ஆகிய நூல்களை வழங்கிய அவர், மறைவுக்கு முந்தைய ஆண்டு திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்டார்.

வ.உ.சிதம்பரனாருக்கும் திராவிட இயக்கத்துக்குமான தொடர்பு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'வ.உ.சிதம்பரனாரைப் பார்த்தே நான் பொதுத்தொண்டில் ஈடுபடத் தொடங்கினேன்' என்று பெரியார் பேசியுள்ளார். வ.உ.சிதம்பரனார், சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவிய போது, பெரியார் நிதி வழங்கியுள்ளார். தங்கள் பகுதியில் இருந்து நிதி திரட்டியும் தந்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதில் வ.உ.சி.யும் பெரியாரும் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும் சமூகநீதியை 1920-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு சென்றதும் வ.உ.சி.யும் பெரியாரும் தான். சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்தில் நடந்த பல்வேறு மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்து தலைமை உரை ஆற்றியவர் வ.உ.சிதம்பரனார். இறுதிக்காலம் வரை சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளார் வ.உ.சி.

'வீரர் சிதம்பரனார்' என்று போற்றி அவர் குறித்துத் தொடர்ந்து எழுதியவர் அண்ணா. திமுக ஆட்சியில் 1968-ம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடத்தப்பட்டபோது, தலைநகர் சென்னையில் வைக்கப்பட்ட பத்து சிலைகளில் ஒன்று வ.உ.சிதம்பரனார் சிலை என்பதை இந்தநாளில் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். கோவைச் சிறையில் இருந்தபோது செக்கிழுக்க வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் அந்த செக்கை நினைவுச் சின்னமாக ஆக்கியவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

1972-ம் ஆண்டு வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் அளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடியவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதே ஆண்டு தான் இந்திய நாடும் தனது 25-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இரண்டையும் இணைத்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்குச் சிலை அமைத்த கருணாநிதி, அதனைத் திறந்து வைக்கப் பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து வந்திருந்தார்.

அந்த விழாவில் பேசும் போது வ.உ.சி. என்ற எழுத்துக்குப் புது விளக்கம் தந்தார் கருணாநிதி.

வ - வழக்கறிஞர்

உ - உரிமைக்காகப் போராடிய, வாதாடிய வழக்கறிஞர்

சி - உரிமைக்காக வாதாடிச் சிறை சென்ற வழக்கறிஞர் - என்று விளக்கம் அளித்தார்.

உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்!"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x