

புதுடெல்லியில் மட்டுமல்ல; தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
மதுரை கருப்பாயூரணியில் நேற்று செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:
திருப்பதி கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் வருமானம் சுரண்டப்படுவதற்கு ஆதாரம் உள்ளது. கோயில்களை அழிக்கும் துறையாக அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது. இந்துக்களை அறநிலையத்துறை சோதித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி, 5 கிலோ பருப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. பைகளில் இலவசப் பொருட்களை வாங்கியவர்கள், பிரதமர் மோடியால் மூட்டைகளில் வாங்கிச் செல்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கண்டிப்பாக கிடைக்கும்.
லடாக்கில் சீனாவுடன் போர் மூளும் சூழலிலும் மக்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்து வருகிறார். காவிரியில் தண்ணீர் வருவது மழையால் மட்டும் அல்ல. மத்திய அரசின் காவிரி மேலாண்மை குழுவால் காவிரியில் தண்ணீர் வருகிறது.
நடிகர் ரஜினி ஆளுமை மிக்கவர். அவர் பாஜகவில் சேர்வாரா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தமிழகத்துக்கு பாஜக ராஜா இல்லை என்கிறார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.
பாஜக அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. பாஜக புதுடெல்லிக்கு மட்டுமல்ல; தமிழகத்திலும் ராஜாதான்.
இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.