

சுங்கச் சாவடிகளை மூடக்கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பிரச்சினையில் மத்திய அரசு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலிப்பு, கட்டண கொள்ளையாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1 முதல் சுங்கச் சாவடிகளுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் காலகட்டத்தில் இப்போராட்டம் நடைபெற்றால், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். எனவே இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும். லாரி உரிமையாளர்களின் இந்த நியாயமான போராட்டத்துக்கு எங்கள் அமைப்பு சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விக்கிரமராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.