Published : 05 Sep 2020 07:54 AM
Last Updated : 05 Sep 2020 07:54 AM

இளம் குழந்தைகள் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

`இந்தியாவில் இளம் குழந்தைகளின் நிலை' குறித்த அறிக்கையின் தெற்காசிய மற்றும் சர்வதேச பதிப்புகளை வெளியிடுகிறார் குடியரசுதுணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

சென்னை

‘‘இந்தியாவில் இளம் குழந்தைகள், குறிப்பாக, ஏழைக் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

‘இந்தியாவில் இளம் குழந்தைகளின் நிலை’ குறித்த அறிக்கை ஒன்றை முன்னணி தொண்டு நிறுவனமான மொபைல் கிரெச்சஸ் மற்றும் ரவுட்லெட்ஜ் அமைப்புகள் இணைந்து தயாரித்துள்ளன. பிவிஎல்எஃப், அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம், டாடா அறக்கட்டளைகள், எச்சிஎல் பவுண்டேஷன், என்சிஎம்எல் ஆகிய அமைப்புகள் இதற்கு உதவிபுரிந்துள்ளன.

பிறந்த குழந்தைகள், தவழும் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணத்தின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு அதிகம். இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள அறிக்கை வறுமை, புறக்கணிப்பு, பாலின பாகுபாடு, சேவைகள் சென்று சேராதது, குழந்தைகள் நலனை கடுமையாக பாதிக்கும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎஸ்) உள்ளிட்டவற்றை வலுப்படுத்த தேவையான பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்கியுள்ளது.

ஆரம்பகட்ட குழந்தைகள் கல்விபுறக்கணிப்பு, குழந்தைகள் நலப் பணியாளர்களுக்கு போதிய ஊதியமின்மை, பயிற்சிஇன்மையால் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படுவது இல்லை. இக்குறையைப் போக்க தேவையான அணுகுமுறை குறித்தும்அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் குழந்தை ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.1,723 செலவழிக்கப்படுகிறது. இந்த தொகையை 4 மடங்காக்கி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இளம் குழந்தைகள் விளைவு குறியீடு மற்றும் இளம் குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் குறியீடு ஆகிய இரண்டும் அறிக்கையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் எந்த மாதிரியான சூழலில் வளர்கிறார்கள், அவர்களுக்கு எந்த மாதிரியான சத்துணவு கிடைக்கிறது போன்றவற்றை அறிய இந்த குறியீடுகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. இந்த இரண்டு குறியீடுகளிலும் கேரளா மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்களும் முதல் இடத்தில் உள்ளன. ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம் ஆகியவை கடைசி 5 இடங்களில் உள்ளன.

அறிக்கையின் தெற்காசிய மற்றும் சர்வதேச பதிப்புகளை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று ‘வெபினார்’ நிகழ்ச்சி வழியாக வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அறிக்கையை வெளியிட்டு, குடியரசு துணைத் தலைவர் பேசியதாவது:

இந்தியா இளம் குழந்தைகளுக்கு குறிப்பாக ஏழை குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கான கட்டமைப்பில் இளம் குழந்தைகள் மீது காட்டப்படும் அக்கறைதான் அடித்தளமாக இருக்கும். நன்கு திட்டமிடப்பட்டு அனைவரும் இணைந்து பணியாற்றும் மக்கள் இயக்கமாக இது மாற வேண்டும்.இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

மொபைல் கிரெச்சஸ் தலைவர் அம்ரிதாஜெயின் பேசும்போது, ‘‘ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அனைத்து அம்சங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அரவணைப்புடன் கூடிய சுற்றுச்சூழலில் அனைத்து குழந்தைகளும் வளர வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் குறிக்கோள். அந்த நீண்ட பயணத்தின் ஒருபகுதியாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x