Published : 05 Sep 2020 07:43 AM
Last Updated : 05 Sep 2020 07:43 AM

குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘மெட்ரோ வாட்டர்’ பிரத்யேக செயலி அறிமுகம்: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

சென்னை

குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ‘மெட்ரோ வாட்டர்’ (METRO WATER) என்ற பிரத்யேக செயலியை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் குடிநீர், கழிவுநீர் தொடர்பான சேவைகளை சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. இவ்வாரியம் 1978-ம்ஆண்டு தொடங்கப்பட்டபோது 1 லட்சத்து 14 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். தற்போது 9 லட்சத்து 72 ஆயிரத்து 833 வாடிக்கையாளர்கள் உள்ளனர். கழிவுநீர் சேவைக்காக 3,529 கிமீ நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களைக் கொடுத்தால் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இதை மாற்றும்வகையில் தற்போது பொதுமக்களிடம் இருந்து நவீன முறையில் புகார்களை பெற ‘மெட்ரோ வாட்டர்’ என்ற செயலியை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கழிவுநீர் மற்றும் குடிநீர் தொடர்பான புகார்களை பெற 24 மணிநேரமும் இயங்கும் புகார் மையம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும் இணைய வழியாக புகார் தெரிவிக்க https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளமும் உள்ளது. தினமும் சராசரியாக குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பாக 320 புகார்கள் வருகின்றன.

புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம்

இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெறுவதை எளிதாக்கவும், புகார்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் ‘மெட்ரோ வாட்டர்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளோம். இந்த செயலி மூலம் பொதுமக்கள் ஸ்மார்ட் போன் வழியே எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம்.

பணியாளர்கள் புகாரை சரி செய்யாமல் புகார் தீர்க்கப்பட்டதாக நிர்வாகத்துக்கு தெரிவிக்க முடியாது. புகாருக்கு தீர்வு காணப்பட்டால் அந்த செயலி வழியாகவே பணியாளர்கள் புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். அதை பார்க்கும்போது புகார்தாரருக்கும் மன நிறைவு ஏற்படும். தங்கள் புகார் மீதான தொடர் நடவடிக்கை குறித்த விவரங்களையும் செயலி வழியே தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதில் பொது மக்கள், குடிநீர் வாரிய வாடிக்கையாளர்கள் தனித்தனியே புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மீதான நடவடிக்கைகளை உயரதிகாரிகள் எளிதில் கண்காணிக்க முடியும். இதன் மூலம் பொதுமக்களின் புகார் மீது விரைவாக தீர்வுகாண்பது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x