Published : 05 Sep 2020 07:31 AM
Last Updated : 05 Sep 2020 07:31 AM

அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்; தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை

அக்டோபர் மாதத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் 8-ம் கட்டமாக செப்.30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் அபாயகரமான கட்டத்தில் உள்ளோம். செப்.1-ம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றின் மிகவும் மோசமான நிலை இனிமேல்தான் வர உள்ளது.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதம் கரோனா தொற்று உச்சத்துக்கு செல்லும். பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சுய சுத்தம் இவற்றில் கவனம் செலுத்துவதை தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன், அடிக்கடி அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதி மேலாண்மையில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டும். அரசே பரிசோதித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சைஅளிக்கும் நிலையை மாற்றி மக்களே வந்து பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறும் நிலையை உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் கிராமப்புற, நகரப்புறங்களில் அதிக அளவில் கரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு மையங்களை உருவாக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகபரிசோதனை செய்வது, காய்ச்சல்முகாம்களை அதிக அளவில் நடத்துவது மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைக்க முடியும்.

இவ்வாறு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x