Published : 05 Sep 2020 07:19 AM
Last Updated : 05 Sep 2020 07:19 AM

மனிதகுலத்தை செம்மைப்படுத்துவதில் ஆசிரியர் பங்கு முக்கியமானது: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் ‘ஆசிரியர் தின’ வாழ்த்து

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று (செப்.5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓர் ஆசிரியரின் இரக்கம், புரிந்து கொள்ளல், ஊக்குவிப்பு ஆகியவையே வகுப்பறையில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. ஆசிரியர்களின் ஒவ்வொரு அசைவும், செயலும், சிந்தனையும் குழந்தைகளின் ஆளுமையை கூர்மைப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு உளம்கனிந்த நல்வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: காலமாற்றத்துக்கு ஏற்ப அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு மனிதகுலத்தை செம்மைப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. உயர்ந்த நிலையை அடைந்த ஒவ்வொருவரும் அதற்கு காரணமான ஆசிரியர்களை நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: அறப்பணியான ஆசிரியர் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ மற்றும் சிறந்தமுறையில் கணினியைப் பயன்படுத்தி பயிற்றுவித்தல், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ‘கனவுஆசிரியர் விருது’ போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியர்களை தமிழக அரசு கவுரவித்துவருகிறது. மாணவர்களுக்கு கல்விசெல்வத்தை அளிப்பதுடன் ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றையும் போதித்து அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு உளம்கனிந்த நல்வாழ்த்துகள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: கற்பித்தலில் புதுமையைப் புகுத்தி, மாணவர்களுக்கு புதுமை சிந்தனைகளில் ஆர்வத்தை ஏற்படுத்த இடைவிடாமல் உழைத்துவரும் ஆசிரியர்களின் கல்விப்பணி மேலும் சிறந்தோங்க வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களை முழுவதுமாகஅர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆட்சியில் இருந்தபோதெல்லாம் ஆசிரியர்களுக்கு திமுக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. புதிய கல்விக்கொள்கையில் ஆசிரியர்களுக்கு எதிரான அம்சங்களை திமுக ஆணித்தரமான எதிர்த்து வருகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நாட்டின் உயர்வுக்கும் சமூகத்தின் மேன்மைக்கும் அடித்தளமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் பணியின் மதிப்பு ஆழ்கடலைப் போன்று அளவிட முடியாதது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆசிரியர்கள் மாற்று இல்லாதவர்கள். அவர்களின் சேவையை எவராலும் ஈடுசெய்ய முடியாது. அனைவரின் உயர்வுக்கும் காரணமானஆசிரியர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்தியாவின் வருங்காலத் தூண்களான அறிவார்ந்த, திறமைமிக்க மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: எதிர்கால சமுதாயத்தை நல்ல குடிமக்களாக விளங்கச் செய்யும் ஆசிரியர்களின் பணி என்றும் நினைவுகூரத் தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமகஎம்பி அன்புமணி, சமக தலைவர்சரத்குமார், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன்யாதவ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x