சன் குழும பண்பலை நிறுவனம் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மத்திய அரசு மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சன் குழும பண்பலை நிறுவனம் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மத்திய அரசு மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

சன் குழுமத்தின் பண்பலை நிறுவனம், பண்பலை வானொலி உரிமத்துக்கான ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுபோல கல் கேபிள் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

பண்பலை வானொலியை இரண்டாம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு மாற்றுவதற்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமம் விண்ணப்பித்தது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெறாததால் இந்த ஏலத்தில் பங்கேற்க சன் குழும பண்பலை வானொலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் குழுமம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், “பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், “ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையின்படி டில்லியில் உள்ள உயர் நீதிமன்றம்தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும். மேலும், இந்திய டெலிகிராப் சட்டப்பிரிவு 4-ன்படி பண்பலை வானொலி நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது மத்திய அரசுக்கே உள்ள பிரத்யேக உரிமை ஆகும். பண்பலை வானொலிக்கான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த அம்சங்களை எல்லாம் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு, இவ்வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் எம்.எஸ்.ஓ.க்கள் மூலம் டிஜிட்டல் முறையில் தொலைக்காட்சி சேனல்களை கல் கேபிள்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்காததால், கல் கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டார். இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in