செப்.7-ல் பல்லவன் ரயில், செப்.10-ல் சிலம்பு ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்

செப்.7-ல் பல்லவன் ரயில், செப்.10-ல் சிலம்பு ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்
Updated on
1 min read

கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட பல்லவன் ரயில் செப்.7-ம் தேதியில் இருந்தும், சிலம்பு ரயில் செப்.10-ம் தேதியில் இருந்தும் இயக்கப்படுகின்றன. மேலும் இயங்கும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் செப்.7-ம் தேதியில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் செப்.7-ம் தேதியில் இருந்து காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஏற்கெனவே அதிகாலை 5.05 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டது. கரோனா அச்சம் காரணமாக பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கப்பட உள்ளது.

இதனால் தாமதமின்றி செல்வதற்காக முன்கூட்டியே அதிகாலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து ரயில் புறப்படுகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது.

ஏற்கெனவே ஒருநாள் இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த சென்னையில் இருந்து செங்காட்டை செல்லும் சிலம்பு ரயில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.

செப்.10-ம் தேதி முதல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். காலை 9 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

அதேபோல் செப்.12-ம் தேதி முதல் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 9.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், ‘‘பல்லவன், சிலம்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்.5) தொடங்குகிறது.

பொதுவான டிக்கெட்டுகளுக்கு அனுமதியில்லை. முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்காக ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும்,’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in