

கரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி முன்னிலையிலும் இன்று (செப். 4) 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்திய அரசின் ஐசிஎம்ஆர் இன்னும் கரோனா தொற்றை தமிழகத்தில் சமூகப் பரவலாக அறிவிக்கவில்லை. அதனால் கரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை.
தளர்வுகள் அதிகம் அளிக்கப்பட்டாலும், பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியைத் தொடர வேண்டும். அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எந்த இடத்திலும் கரோனா மருந்து தட்டுப்பாடு கிடையாது. இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு வளர்ந்த நாடுகளிலேயே கரோனா வைரஸ் தொற்று முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும் நிலையில் தமிழகத்தில் அதிகப்படியாக 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியவருகின்றன.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழகத்திற்கு 300 தடுப்பூசி மருந்துகள் வர வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்திலும், சென்னை அரசு மருத்துவமனையிலும் ஆரோக்கியமாக உள்ள தன்னார்வலர்களுக்குச் செலுத்திப் பரிசோதனை நடத்தப்படும்" .
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.