Last Updated : 04 Sep, 2020 05:42 PM

 

Published : 04 Sep 2020 05:42 PM
Last Updated : 04 Sep 2020 05:42 PM

ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல்

ராமநாதபுரத்தில் இளைஞர் அருண் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணை செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ்(24) என்ற இளைஞர் கடந்த ஆக.31-ல் 12 பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று ஆறுதல் கூறினார்.

பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா காலத்தில் இந்தோனேசியா நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.

அப்போதே நவாஸ் கனியை போலீஸார் கைது செய்திருக்க வேண்டும். அவர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதால் எம்பியாக இருக்க அருகதை இல்லாதவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெரியபட்டினத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். அவர்களை அப்போது எம்எல்ஏவாக இருந்த ஜவாஹிருல்லா தலையிட்டு விடுவிக்க வைத்தார்.

ராமநாதபுரத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு காவல்துறை தனிப்பட்ட காரணம் எனக் கூறி முகநூலில் பதிவிட்டது. காவல்துறை யாரையும் கைது செய்யாமல், விசாரணை செய்யாமல் எப்படி இப்படி கூறியது. முகநூலில் பதிவிட்டவரை தற்காலிக பணிநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்.

அருண் பிரகாஷ் தொடர்ந்து 3 ஆண்டுகள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்நின்று நடத்தியுள்ளார். இக்கொலையில் குற்றவாளிகளைக் காப்பாற்ற காவல்துறை முகநூலில் பதிவு போட்டதாக தெரிகிறது. என்னைப்போன்றவர்கள் கொலை குறித்து முகநூலில் பதிவிட்டதற்கு கொச்சைப்படுத்தும் வகையில் காவல்துறை செயல்பட்டுள்ளது.

அருண் குமார் கொலை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணத்தை காவல்துறை சொல்ல வேண்டும். இக்கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரணை செய்ய வேண்டும். வழக்கை திசை திருப்பி உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட காவல்துறையினர் சதி செய்கின்றனர்.

இதே மாவட்டம் புதுமடத்தில் தேசியக் கொடியில் செருப்பைக் கட்டி ஏற்றியவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இதுபோன்ற பல இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.எனத் தெரிவித்தார்.

பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x