

ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் உயர் அதிகாரிகள் தலையிட தடை கோரிய வழக்கின் விசாரணை செப். 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தேவேந்திர நகரைச் சேர்ந்த பி.பிரதீப்சக்கரவார்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் புலியன் பைன்டெக் எல்எல்பி நிறுவனம் 750 பேரிடம் ரூ.300 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது. நானும் இந்த நிறுவனத்தில் ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன்.
இந்த மோசடி தொடர்பாக துளசிமணிகண்டன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸாரும், கற்பகவள்ளி என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான நீதிமணி, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மோசடி பெரியளவில் நடைபெற்றுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.
இருப்பினும் ராமநாதபுரம் உதவி ஆட்சியர் சுகபத்ரா, ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (இப்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்), டிஎஸ்பி வெள்ளைத்துரை ஆகியோரின் தலையீடு காரணமாக சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையில் உதவி ஆட்சியர், எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் தலையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்கெனவே நிலுவையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை செப். 14-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.