

இந்தியாவில் வரும் காலங்களில் வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை எஃகுத் தகடுகளால் கட்டும் போக்கு அதிகரிக்கும் என்று கட்டமைப்பு பொறியியல் துறையின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சென்னை தரமணியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன் ஒருபகுதியாக நிலநடுக்கம் தொடர்பான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிஎஸ்ஐஆர் தரமணி வளாக இயக்குநர் டாக்டர் நாகேஷ் ஆர்.ஐயர் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞானிகள் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன், டாக்டர் ஜி.எஸ்.பழனி ஆகியோர் கூறியதாவது:
வரும் காலங்களில் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக எஃகுத் தகடுகளால் வடிவமைக்கப்பட்ட வீடுகளைக் கட்ட வேண்டிய நிலை வருங்காலங்கள் மேலும் அதிகரிக்கும். மணல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. மேலும், எஃகுத் தகடுகளால் வீடுகளை உடனடியாக கட்ட முடியும். இது நிலநடுக்கத்தை தாங்கும் தன்மை கொண்டது.
பஞ்சாபில் 10 மாடி வீடு ஒன்று 48 மணி நேரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றால் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் அதை ஆய்வு செய்தபோது அந்த கட்டிடம் தரமாக இருப்பது தெரிந்தது. இந்த வகை கட்டுமானங்கள் 6.5 ரிக்டர் நிலநடுக்கத்தையும் தாங்கும் தன்மை கொண்டவை.
இதேபோல், நாட்டில் பல்வேறு இடங்களில் எஃகுத் தகடுகளால் வீடு கட்ட அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீனா போன்ற நாடுகளில் தற்போது அதிகமாகவே எஃகு வீடுகளை கட்டி வருகின்றனர். சாதாரண கான்கிரீட் வீடுகளை ஒப்பிடுகையில் எஃகு வீடுகளுக்கு 1.5 மடங்கு செலவு அதிகமாக இருக்கிறது. வரும் காலங்களில் இந்த செலவு குறையும். எஃகு வீடுகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் முழுமையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.