

சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் பேச்சுக் கலைக்கு உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.
கோ.ஒளிவண்ணன் எழுதிய ‘மேடையில் பேசலாம் வாங்க’ நூல் வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது. இவ்விழாவுக்கு தலைமையேற்று, நூலை வெளி யிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
பேச்சுக் கலையென்பது சாதாரண கலையல்ல. எழுத்துக் கலைக்கு முன்பே பேச்சுக் கலை இருந்தது. எழுத்தறிவு சதவீதம் குறைந்திருந்த சமூகத்தில் பேச்சுக் கலை மூலமாகத்தான் சமுதாய சீர்திருத்தக் கருத்துக் களை மக்களிடையே கொண்டு போனார்கள். தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்த நிறைய மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகித்தது பேச்சுக் கலையே.
பேச்சுக் கலையில் சிறந்து விளங்க நகைச்சுவை உணர்வும், எதையும் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறனும் அவசியம். சுருக்கமாக பேச வேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. சமூக அக்கறையோடு திட்டமிட்டு, சிந்தித்து பேசிய தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். மேடையேறி பேசத் தயங்குவோரின் தயக்கத்தைப் போக்கும் நல்ல பல ஆலோசனைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.