

வேலூரில் இருந்து மத்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
காட்பாடி காந்திநகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கிருந்து தினமும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பிவைக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ரொக்க இருப்பு பணத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியில் இந்த கிளை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மத்திய ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கே.எச்.ஜோஷி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு புகார் மனு ஒன்றை சமீபத்தில் அனுப்பியுள்ளார்.
அதில், “காட்பாடி காந்திநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி 7 லட்சத்து 28 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டுகள், 19 லட்சத்து 83 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட 100 ரூபாய் நோட்டுகள் வந்தன.
இவற்றில் ஒரு 500 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டில் 2 கள்ள நோட்டுகள் இருந்தது. அதேபோல, ஏப்ரல் 23-ம் தேதி 2 லட்சத்து 60 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட 100 ரூபாய் நோட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதில் ஒரு 100 ரூபாய் கள்ள நோட்டு என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் சுவாமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.