Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போர்க்கோலம்: தா.பாண்டியன்

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இடதுசாரிகள் போர்க்கோலம் பூண்டுள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசினார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் தா.பாண்டியன் பேசியதாவது: களங்கமற்று பணியாற்றியிருக்கிறோம் என்ற துணிவோடு கம்யூனிஸ்டுகள் இந்த தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால், மற்றவர்களுக்கோ வழக்குகள் முடியாமல் உள்ளதால் தீர்ப்பையே திருத்துவதற்கு தேர்தல் வெற்றி தேவைப்படுகிறது.

இமயம் சென்று கல்லை எடுத்து கண்ணகிக்கு சிலை வடித்த சேரனுக்கும், செங்குட்டுவனுக்கும் வாரிசு என்று தம்பட்டம் அடித்த வர்கள், மோடியை பிரதமராக்குவோம் என காவடி எடுக்கிறார்கள். 80 ஆண்டுகளாக பேசிய தமிழன் பெருமைகள் எங்கே போனது? தமிழ் மானம், தமிழ் ஈழம் என வீர வசனம் பேசிவிட்டு மோடியை பிரதமாராக்குவோம் என்றால் இவர்கள் ஏன் கட்சி நடத்த வேண்டும்? குஜராத்தில் காந்தியடிகள் நினை வாக சட்டப்படி மதுவிலக்கு உண்டு. டாஸ்மாக் போன்ற அரசு மதுக் கடைகள் இல்லை. ஆனால் தெருக்களில் காய்கறி விற்பதுபோல, மது விற்கப்படுகிறது.

ராஜஸ்தானில் 38 எண்ணெய் ஊற்றுகளில் 3-ல் லண்டன் நிறுவனம் எண்ணெய் எடுக்கிறது. ராஜஸ்தானிலிருந்து, குஜராத்தில் உள்ள அம்பானியின் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு அந்த எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. மோடி ஆட்சி அமைத்தால் 38 ஊற்றுகளும் அம்பானிக்கு போய்ச்சேரும். பொதுத்துறையா, தனியார் துறையா என்பதுதான் இந்த தேர்தல் போட்டி. 543 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் கோடியை ஒதுக்குவது அம்பானிக்கு பெரிதல்ல.

சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க இடதுசாரிகள் போர்க் கோலம் பூண்டுள்ளனர். இது தேர்தல் யாசகம் அல்ல. அரசியல் போராட்டம். நாட்டைக் காப்பதற்காக போராடுகிறோமே தவிர பத்து பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவதற்காக அல்ல என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x