Published : 09 Sep 2015 08:48 AM
Last Updated : 09 Sep 2015 08:48 AM

மாநாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களை வரவேற்க சென்னையில் 16 இடங்களில் கலைநிகழ்ச்சிகள்: பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் போலீஸார் குவிப்பு

சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை யொட்டி, 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடக்கிறது. மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். மத்திய அமைச் சர்கள், வெளிநாட்டு முதலீட்டு குழுக்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முனைவோர் என 5 ஆயிரம் பேர் வரை மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கும் கண்காட்சியையும் மாநாட்டையும் பார்வையிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவர் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநாட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை தொழில் துறை செய்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசதிக்காக, சென்னை விமான நிலைய வருகை பகுதியில் பிரத்யேக ஏற்பாடுகளை தமிழக அரசு கோரிக்கையின்படி இந்திய விமான நிலைய ஆணையம் செய்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்குமிடம், நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் சென் னைக்கு அருகில் உள்ள தொழிற் பேட்டைகள், தொழில் பூங்காக் களை பார்வையிடவும், சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க வும் பிரத்யேக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாநாட்டையொட்டி சென்னை மாநகர் மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாலைகள் தரம் உயர்த் தப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகம், காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மெரினா கடற்கரையில் காட்சி அரங்கம், அடையாறு ஆற்றில் லேசர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில் மொத்தம் 8 அரங்குகள் உள்ளன. 6 அரங்குகளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படு கிறது. பிரதான அரங்கில் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடக்கிறது. விழாவுக்கு வரும் பார்வையாளர்கள் வசதிக்காக, வர்த்தக மைய வளாகத்தில் அரங்கங்களுக்கு வெளியே சிறப்பு கூடங்கள் போடப்பட்டுள்ளன. வர்த்தக மையத்துக்கு எதிரில் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம் முதல் கிண்டி கத்திப்பாரா வரையும் தலைமைச் செயலகம் முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையும் மாநாட்டு வரவேற்பு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று பல் வேறு இடங்களில் வரவேற்பு தட்டி கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்களை வரவேற் கும் வகையில் கிண்டி, தேனாம் பேட்டை, நந்தனம், அசோக்நகர், அடையாறு உள்ளிட்ட 16 முக்கிய பகுதிகளில் சாலை ஓரத்தில் மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாநாட்டையொட்டி சென்னை யில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்விடம், முதலீட்டாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக மொத்தம் 4 ஆயிரம் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாநாட்டு வளாகம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல், வர்த்தக மையம் வரை போலீஸார் நேற்று காலை முதலே குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உத்தரவுகளை அந்தந்த பகுதி உதவி கமிஷனர் கள் பிறப்பித்ததுடன், ஒத்திகையும் நடத்தப்பட்டது.

முதலீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங் களை நிறுத்த வர்த்தக மைய வளாகம் மற்றும் அருகில் உள்ள ஐடிபிஎல் காலனி வளாகம் ஆகி யவை பார்க்கிங் பகுதிகளாக மாற் றப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி யில் 4 ஆயிரம் வாகனங்கள் நிறுத் துவதற்கான ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக போக்குவரத்து போலீ ஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x