Last Updated : 08 Sep, 2015 08:48 AM

 

Published : 08 Sep 2015 08:48 AM
Last Updated : 08 Sep 2015 08:48 AM

வழக்கறிஞர் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?- பிடிபட்ட ரவுடியிடம் தீவிர விசாரணை

மதுராந்தகம் அருகே வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட ரவுடியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ், நேற்று முன்தினம் இரவு மதுராந்தகம் அருகேயுள்ள சூணாம்பேடு என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஈஸ்வரனை போலீஸார் தேடி வந்தனர். டிஎஸ்பி மோகன், மாமல்லபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ், கேளம்பாக்கம் ஆய்வாளர் பிரகாஷ் பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சென்னையில் பதுங்கியிருந்த ஈஸ்வரனை நேற்று காலை கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் அதிலிருந்த தோட்டாக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ஈஸ்வரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, ‘9 எம்.எம் பிஸ்டல்' வகையைச் சேர்ந்தது. உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

கொலைக்கு காரணம் என்ன?

ஈஸ்வரன் மீதான வழக்குகளை காமேஷ்தான் நடத்தி வந்துள்ளார். காரை சரியாக ஓட்டாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்ததாக ஈஸ்வரன் கூறுவதை முழுமையாக நம்ப முடியவில்லை. தன் மீதுள்ள வழக்குகளை காமேஷ் சரியான முறையில் நடத்தாததால் ஏற்பட்ட கோபத்தில் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

கொலை நடந்த இடம் எது என்பதில் முதலில் குழப்பம் ஏற்பட்டது. ஈஸ்வரன், இடத்தை மாற்றி மாற்றி கூறிக்கொண்டே இருந்தார். கடைசியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சூணாம்பேடு என்ற இடத்தில்தான் கொலை நடந்ததாக கூறினார். அந்த இடத்துக்கு ஈஸ்வரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். வாக்குமூலத்தில் கூறியது போலவே அனைத்தையும் நடித்துக் காட்டினார்.

காமேஷின் காரையும் கைப்பற்றியுள்ளோம். காருக்குள் வைத்தே காமேஷை கொலை செய்ய நடந்த முயற்சியில் தடுப்புக் கம்பி மீது கார் மோதியதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினோம். ஆனால் காருக்குள் துப்பாக்கியால் சுட்டதற்கான தடயங்களோ, ரத்தக் கறையோ இல்லை.

‘காமேஷை சுட வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. துப்பாக்கியை அவரிடம் கொடுப்ப தற்காக தூக்கி எறிந்தபோது தற்செயலாக குண்டு வெடித்து காமேஷ் இறந்துவிட்டார்’ என ஈஸ்வரன் கூறினார். காமேஷ், ஈஸ்வரன் ஆகியோருடன் வழக்கறி ஞர் செல்வமும் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

தந்தை எழுப்பும் சந்தேகம்

காமேஷின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. அவரது வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு, முதுகு தண்டுவடப் பகுதி வரை துளைத்துச் சென்றுள்ளது. இதில் உடலுக்குள்ளேயே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கிறார். இரவு சுமார் 11 மணிக்கு சுடப்பட்ட காமேஷ், அதிகாலை 2.30 மணி வரை உயிரோடு இருந்திருக்கிறார்.

காமேஷ் கொல்லப்பட்ட தகவலை அறிந்ததும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்களும் ஏராளமான வழக்கறிஞர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காமேஷை கொலை செய்தது தனி நபர் அல்ல என அவரது தந்தை னிவாசன் சந்தேகம் கிளப்பியுள்ளார். நிருபர்களிடம் அவர் கறியதாவது:

காமேஷ், நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ‘விழுப்புரத்துக்கு ஒரு வேலை விஷயமாக நண்பர்களுடன் செல்கிறேன்’ என மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு 2 மணியளவில் இன்னொரு வழக்கறிஞர் போன் செய்து, காமேஷை ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்துள்ளது எனத் தகவல் சொன்னார். சம்பவ இடத்துக்கு சென்று நடந்தவற்றையும், கிடைத்த தடயங்களையும் கவனித்தபோது எனது மகனை ஒரு கும்பல் திட்டமிட்டு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

கார் ஓட்டி வந்த காமேஷை ஒரு கும்பல் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றிருக்கலாம். தப்பிக்கும் முயற்சியில் அவர் திமிறியதால் நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் கார் மோதியிருக்க வேண்டும். அப்போது அந்த கும்பல் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும். காமேஷின் செல்போன் ஒன்றையும் காணவில்லை.

இதன் பின்னணியில் ஒரு கும்பல் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து, கார் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சுட்டுக் கொன்றதாக வழக்கு பதிவு செய்து விஷயத்தை போலீஸார் முடிக்கப் பார்க்கின்றனர். இந்தக் கொலைக்குக் காரணம் என்ன, உண்மையான கொலையாளிகள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடய அறிவியல் நிபுணர்களைக் கொண்டு, வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என காமேஷின் தந்தை மற்றும் சக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். மாஜிஸ்திரேட் அனுமதி இருந்தால் மட்டுமே வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததால் பிரேதப் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர், வீடியோ பதிவு தேவையில்லை என்று உறவினர்கள் ஒப்புக்கொண்டதால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காமேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

50 ஆயிரம் பேரிடம் துப்பாக்கி

தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேரிடம் முறையான உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இருப்பதாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேசிய ஆயுத உரிமம் தகவல் தொகுப்பு (National Database on Arms Licence) மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2,890 பேர் முறையான உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதில் சுமார் 800 பேர் இரட்டை குழல் துப்பாக்கி வைத்துள்ளனர்.

துப்பாக்கி உரிமம் பெறுவது எப்படி?

துப்பாக்கி தேவைப்படுவோர், அதற்கான காரணத்துடன் காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உரிமம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்ட போலீஸார், அவரது நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்தி ஓர் அறிக்கை கொடுப்பர். அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். உள்துறை அமைச்சக அதிகாரிகள் கொடுக்கும் பதில் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும். அந்த உரிமத்தில் அவருக்கு எந்த வகையான துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த உரிமத்தை அரசு அனுமதியுடன் துப்பாக்கி விற்கும் ஏஜென்டிடம் கொடுத்தால் அவர் துப்பாக்கி வழங்குவார்.

கொலையில் எழும் சந்தேகங்கள்

காரில் காமேஷ், ஈஸ்வரன் ஆகிய 2 பேர் மட்டும் சென்றார்களா அல்லது வேறு நபர்கள் சென்றார்களா? காமேஷை மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படும் வழக்கறிஞர் செல்வம், சம்பவ இடத்துக்கு எப்படி வந்தார்? இவரும் காரில் சென்றாரா?

சம்பவம் நடந்த இடம் மாமல்லபுரமா அல்லது சூணாம்பேடா? கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி யாருடையது? வழக்கறிஞரும் அவருடைய கட்சிக்காரரும் காரில் செல்லும்போது துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படியானால் கொலை செய்யும் திட்டத்துடன்தான் வழக்கறிஞர் காமேஷை அழைத்துச் சென்றார்களா?

காமேஷ் சுடப்பட்டு அவரது காரிலேயே மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் காரில் ரத்தக் கறையே இல்லாமல் இருப்பது எப்படி?

துப்பாக்கியால் சுடப்பட்டவரை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் அடையாறு வரை காரில் கொண்டுவரக் காரணம் என்ன? சாலை தடுப்புக் கம்பியில் மோதியதில்தான் காரின் இடது பகுதியில் அடிபட்டதா? இது உண்மை என்றால் விபத்து நடந்த இடம் எது?

கொலை சம்பவத்தில் இப்படி பல சந்தேகங்களை காமேஷ் குடும்பத்தினரும் போலீஸாரும் எழுப்புகின்றனர்.

சென்னையில் 7 ஆயிரம் கள்ளத்துப்பாக்கிகள்

துப்பாக்கி விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவர் கூறும்போது, ‘‘அரசு அனுமதியுடன் துப்பாக்கி வாங்க வருபவர்களைவிட, கள்ளத்தனமாக துப்பாக்கி வாங்க வருபவர்கள்தான் அதிகம். இப்போது ஆன்லைனில்கூட துப்பாக்கியை விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். சென்னையில் சுமார் 7 ஆயிரம் பேரிடம் கள்ளத்துப்பாக்கிகள் இருக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x