

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரும் வழக்கில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பா யம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக் கோரி தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் எஸ்.ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மதிமுக பொதுச்செயலர் வைகோ, பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி அகல வாக்கிலும், அணை முன்பும் வேலையைத் தொடங்காமல், மற்ற பகுதியில் தூர் வாரி வருகின்றனர். அங்கு தூர் வாரும் பெயரில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டும். மதகுகள் பழுதையும் சரிசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சார் பில் தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஸ்ரீவைகுண்டம் அணை யில் தூர் வாரும் பணி மேற்கொள் வதுடன் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்திலுள்ள நீர்நிலை களை தூர் வாரும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று பொதுப்பணித்துறையிடம் அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை வழக்கறிஞர், தூர் வாருவதற்கான அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் உரிய உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியை கண்காணிக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் (குழு ஒருங்கிணைப்பாளர்), இந்திய--- கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, வேளாண் ஆர்வலர் நயினார் குலசேகரன், வழக்கறிஞர் தவசி ராஜன், ஸ்ரீவைகுண்டம் அணை நீர் பிடிப்பு குளங்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன் ஆகிய 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, ஸ்ரீவைகுண்டம் அணையில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை கண்காணித்து, அமர்வில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இக்குழு தூர் வாரும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பொதுபணித் துறையினர் மதகுகள் பழுதையும் சரிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.