

திருக்கோவிலூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்ததில் பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 9-ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் அருகே உள்ள சோழ பாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேலு என்பவரின் மகன் பாரதி (16), ஜி.அரியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அதே ஊரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவரும் வேறு சிலரும் அங்குள்ள வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பாரதியை 9-ம் வகுப்பு மாணவர் கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த மாணவர் பாரதியை உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை பாரதி உயிரிழந் தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து 9-ம் வகுப்பு படிக்கும் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.