மதுரை புத்தக திருவிழா: ஒரே நாளில் தீர்ந்துபோன கடல்

மதுரை புத்தக திருவிழா: ஒரே நாளில் தீர்ந்துபோன கடல்
Updated on
2 min read

மதுரையில் கடந்த 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றுவந்த புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் கடந்த 28-ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் 10-வது நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் வாசகர்கள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.

முதல் நாளில் இருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து, தினமும் பத்து பதினைந்து அரங்குகளைப் பார்வையிட்டு வாங்க வேண்டிய புத்தகங்களை குறிப்பெடுத்துக் கொண்டவர்கள் இன்று அந்தப் பட்டியலுடன் வந்து புத்தகங்களை வாங்கினார்கள். பெரும்பாலானவர்கள் ஜவுளிக் கடை பை நிறைய புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

குழந்தைகள் கையில் சில புத்த கங்கள், தாய், தந்தையர் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் கையில் சில புத்தகங்கள் என்று மகிழ்ச்சியாக அரங்கில் இருந்து வெளியேறியவர்களையும் காண முடிந்தது. மாலையில் இலக்கிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கூட்டம் மிக அதி கமாக இருந்தது. முன்னதாக போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி மற்றும் ஆலோசனையும் நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

புத்தக கண்காட்சியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு பேச் சுப் போட்டியும் ஏற்கெனவே நடத்தப் பட்டிருந்தது. வெற்றி பெற்றவர்க ளுக்கான பரிசளிப்பு விழா இன்று மாலையில் நடைபெறுகிறது.

புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு, சமஸ் எழுதிய கடல் புத்தகத்தைத் தவிர, மற்ற புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான புத்தகங்கள் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டதால், அரங்குக்கு கடல் புத்தகம் வரவில்லை.

ஒரே நாளில் தீர்ந்துபோன `கடல்’

நேற்று தி இந்து நடுப்பக்க ஆசிரியரும், கடல் நூலாசிரியருமான சமஸ் தி இந்து அரங்கிற்கு வந்ததையொட்டி, சென்னையில் மீதமிருந்த 30 புத்தகங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவர் அரங்குக்கு வரும் முன்பே அவையும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேபோல, டி.எல்.சஞ்சீவி குமார் எழுதிய மெல்லத் தமிழன் இனி புத்தகமும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

மத்திய அரசு நூல்களுக்கு வரவேற்பு!

புத்தகத் துறையின் மேம்பாட்டிற்காகவும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மக்களிடையே வளர்க்கவும் மத்திய அரசால் கடந்த 1957-ம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. புத்தக வெளியீடு மற்றும் விற்பனை மட்டுமின்றி, இந்திய புத்தகங்களை உலகெங்கும் பரவலாக்குதல், குழந்தை இலக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழுள்ள இந்த அமைப்பு சார்பில், மதுரை புத்தக கண்காட்சியில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற அரங்குகளை விட இங்கே புத்தக விலை குறைவு என்பதால், மக்கள் ஆர்வமுடன் புத்தகம் வாங்கினார்கள். அதேநேரத்தில், புத்தக பட்டியலில் உள்ள நூல்களில் 25 சதவிகித புத்தகங்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தெரிந்திருந்தால், அதிக புத்தகங்களுடன் வந்திருப்போம். அடுத்த ஆண்டு இந்த குறை களையப்படும் என்று அரங்க பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

முன்னேற்றப் பதிப்பகம் மலரும் நினைவுகள்!

ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கியது முன்னேற்றப் பதிப்பகம். பின்தங்கிய, வளரும் நாடுகளிலும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், இலக்கியம் மற்றும் அறிவியலை பரப்பவும் இந்த நிறுவனம் மிகக்குறைந்த விலையில் புத்தகங்களை அச்சிட்டு அனுப்பி வந்தது. வளவளப்பான காகிதம், நேர்த்தியான அச்சு, கண்ணைக் கவரும் புகைப்படங்கள், கெட்டியான அட்டை என்று உலகத் தரத்துடன் இருந்த அந்தப் புத்தகங்கள் வெறும் 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு இந்த பதிப்பகம், தன் பணியை நிறுத்திக் கொண்டது. இப்போது அந்தப் பதிப்பகம் மட்டும் இருந்திருந்தால், புத்தக கண்காட்சியை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துவிட்டுச் சென்ற சாதாரண மனிதர்களும், அரசு பள்ளி குழந்தைகளும் தங்கள் கைகளில் டஜன் கணக்கில் புத்தகங்களை அள்ளிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்கிறார் பேராசிரியர் மேலச்சிவல்புரி முருகேசபாண்டியன்.

“டால்ஸ்டாய், கார்க்கி, செக்காவ், தஸ்தயேவ்ஸ்கி, புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் இந்தியாவில் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு முன்னேற்றப் பதிப்பகமே காரணம். தமிழத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் ரஷ்யாவிலேயே தங்கி, நூற்றுக்கணக்கான புத்தகங்களை மொழி பெயர்த்து, அங்கேயே அச்சிட்டு அனுப்பி வைத்தனர். அதுவொரு பொற்காலம்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in