

பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன. எனினும், மக்களிடம் இருக்கும் கரோனா அச்சம் காரணமாகப் பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருப்பதால், வசூலும் குறைவாகவே இருக்கிறது. இதனால், அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சோர்வடைந்திருக்கிறார்கள்.
ஆனால், கரோனா காலத்துக்கு முன்பிருந்தே, கடந்த 19 மாதங்களாகப் போக்குவரத்து ஊழியர்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்தக் காலகட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு இதுவரை ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்திருக்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் க.ராஜாராம் கூறியதாவது:
"கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் ஜூலை 29 வரை மட்டும் 6,221 பேருக்கு வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்), பணிக்கொடை (கிராஜுவிட்டி), ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை (கம்யூட்டேஷன்), விடுப்பு ஒப்படைப்புத் தொகை என மொத்தம் ரூ.1,624.78 கோடி வழங்கப்படவில்லை. இதற்கு 6 சதவீதம் வட்டி கணக்கிட்டால் கூட ஒவ்வொரு மாதமும் ரூ.8 கோடியே 12 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வர வேண்டும்.
ஓய்வுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணத்தை முடிக்கலாம்; வீட்டுக் கடனை முடித்துவிடலாம் என்று போக்குவரத்து ஊழியர்கள் நினைத்திருந்தனர். அவர்கள் எல்லாம் இப்போது சொல்லொணாத் துயரத்தில் உள்ளார்கள். இந்த மன உளைச்சலால் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்திருக்கிறார்கள்.
கோவை போக்குவரத்துக் கோட்டத்தில் மட்டும் 118 பேர் வரை இறந்திருக்கிறார்கள். இது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினரும் தொமுச பொதுச் செயலாளருமான சண்முகத்தின் மூலம் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால், எந்தப் பதிலும் இல்லை. நாங்களும் பல முறை முறையிட்டு தலைமைக்குக் கடிதம் எழுதிவிட்டோம். நேரிலும் வலியுறுத்திவிட்டோம். எதுவும் நடக்கவில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் இதில் வரும் 'கம்யூட்டேஷன்' எனப்படும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகைகூட வழங்கப்படாததுதான். அதாவது, ஒரு பணியாளர் ஓய்வு பெறுகிறார் என்றால் அவருக்கு பி.எஃப், பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகையுடன் இந்த கம்யூட்டேஷன் தொகையும் வழங்கப்படும்.
ஓய்வுக்குப் பின் ஓய்வூதியமாக ரூ.20 ஆயிரம் வருவதாக இருந்தால் அதில் 3-ல் ஒரு பங்கு தொகையைக் கணக்கிட்டு (15 ஆண்டுகளுக்கு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யும் வகையில்) முன்கூட்டியே ஒரு தொகை கொடுப்பார்கள். ஒரு தொழிலாளி இதில் ரூ.5 லட்சம் பெற்றால் மாதம் ரூ.5,000 அவருக்கான ஓய்வூதியப் பணத்தில் வட்டியுடன் பிடித்தம் செய்யப்படும். இப்போது கம்யூட்டேஷன் பணமும் தரவில்லை. ஆனால், மாதா மாதம் வரும் பென்ஷன் பணத்தில் கம்யூட்டேஷனுக்கான தவணைத் தொகையைப் பிடித்தம் செய்துவிடுகிறார்கள்.
பெருந்தொற்று காரணமாக, தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, வருங்கால வைப்பு நிதியிலிருந்து, 80 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள இரண்டு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், பணி ஓய்வுபெற்ற பின்னரும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியைத் தராமல் வஞ்சித்து வருகிறார்கள்.
ஓய்வூதிய ஒப்பந்தப் பலன், ஊதியக் குழுவின் பரிந்துரை மின்துறை, அரசு ஊழியர்கள் போன்ற அனைத்து ஊழியர்களுக்குமான ஒப்பந்தமாகும். ஆனால், இதைத் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் வழங்கவில்லை. இது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகி எங்களுக்குச் சாதகமான உத்தரவும் வந்துவிட்டது. எனினும், 2010, 2013, 2016-ம் ஆண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தப் பலன் இதுவரை வழங்கப்படவில்லை. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படியான ஓய்வூதிய உயர்வும் வழங்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும்போது அனுமதிக்கப்படும் மருத்துவத் திட்டம் பணியாளர்கள் ஓய்வுபெற்ற உடனேயே மறுக்கப்படுகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு போக்குவரத்து முதன்மைச் செயலாளர் எங்களை அழைத்துப் பேசி மருத்துவத் திட்டத்தினை அமல்படுத்துவதாகக் கூறினார். ஆனால், அமல்படுத்தவில்லை.
கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, எங்கள் ஓய்வூதியதாரர்கள் மட்டும் மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாமல் பரிதவிக்கின்றனர். இதற்கெல்லாம் எப்போது தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை".
இவ்வாறு ராஜாராம் கூறினார்.