காட்டுமன்னார்கோவில் அருகே வெடி விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு: தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்; ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியில் நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலையில் இன்று (செப். 4) வெடி விபத்து ஏற்பட்டதில், உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், "கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குருங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பட்டாசு தயாரிப்பதைக் குடிசைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். இங்கு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சம்பவ இடத்திலேயே 5 பேர் மரணம் அடைந்தார்கள் என்றும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 2 பேர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் சொல்கின்றன. உயிரிழந்த 7 பேரும் பெண்கள். அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கரோனா காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள், தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in