Published : 04 Sep 2020 02:58 PM
Last Updated : 04 Sep 2020 02:58 PM

குருங்குடி வெடி ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும்; அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

குருங்குடி வெடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (செப். 4) வெளியிட்ட அறிக்கை:

"கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குருங்குடி கிராமத்தில் காந்திமதி என்பவருக்குச் சொந்தமான வானவெடி மற்றும் நாட்டுவெடி தயாரிக்கும் தொழிற்சாலை கரோனா ஊரடங்கை ஒட்டி மூடப்பட்டு நேற்றுதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வெடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் ஆலை உரிமையாளர் காந்திமதி உள்ளிட்ட 7 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்த சகோதரிகள் வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக பணிக்குச் சென்றபோது இன்னுயிரையே இழந்துள்ளனர்.

பட்டாசு ஆலையில் பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், வாழ்வாதாரம் ஈட்ட வேறு வழியில்லாததால் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துதான் இத்தகைய பணிகளுக்குச் செல்கின்றனர். இனியும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில் வெடி தயாரிப்பு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வெடி ஆலைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சத்துக்குக் காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

குருங்குடி வெடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அவசரகால உதவிகளை அப்பகுதியைச் சேர்ந்த பாமகவினர் மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x