

திருச்சி மாவட்டத்தில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது இ-மெயில் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் நேற்று (செப்.3) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"2020- 2021 ஆம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்துக்குக் கூடுதலாக தற்போது கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்று மெட்ரிகுலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 17-ல் உத்தரவிட்டுள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரின் செயல்முறைகளுக்கு மாறாக திருச்சி மாவட்டத்தில் 40 சதவீதத்துக்குக் கூடுதலாக பள்ளிகள் கட்டணம் வசூல் செய்யக் கூடாது.
இதை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ceotrichy.complaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.