காட்டுமன்னார்கோவில்  அருகே நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலையில் வெடி விபத்து: உரிமையாளர் உள்ளிட்ட 7 பெண்கள் உயிரிழப்பு

விபத்து நிகழ்ந்த இடத்தில் கூடியுள்ள பொதுமக்கள்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் கூடியுள்ள பொதுமக்கள்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியில் நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதில், உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் வாணவேடிக்கைகள் மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில், இன்று (செப். 4) காலை குருங்குடி ஐயங்குளம் அருகே உள்ள காந்திமதி என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, வெடி மருந்தை இடிக்கும்போது திடீரென வெடி மருந்து வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது. தொழிற்சாலையில் வெடி மருந்து தயாரிக்கும் பணியில் இருந்த கடையின் உரிமையாளர் காந்திமதி (58), அதே ஊரைச் சேர்ந்த மலர்க்கொடி (65), லதா (40), சித்ரா (45), ராசாத்தி (48) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ருக்மணி (38), ரத்னாயாள் (60), தேன்மொழி (35), அனிதா (26) ஆகிய 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ருக்மணி, ரத்னாயாள் ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

தேன்மொழியும், அனிதாவும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் 2 பேரும் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் வெடி விபத்தில் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in