

ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் பரிசோதனை (sero survey) மூலம் புதுச்சேரியில் இரண்டு வாரத்தில் 26 மடங்கு அதிக நோய் தொற்று இருப்பது ஜிப்மர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அத்துடன் புதுச்சேரியில் நோய் எதிர்ப்பான் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, ஜிப்மர் மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை மற்றும் சமூக நோய் தடுப்புதுறை வல்லுநர் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பங்கேற்றனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை அளித்துள்ள முடிவுகள் விவரம்:
"மொத்தம் 30 தொகுப்பாக பிரித்தோம். 21-க்கு 9 என்ற விகிதத்தில் நகர்ப்புற, கிராமப்புறம் என்று விகிதாச்சாரத்தில் ஆய்வு நடைபெற்றது. குறிப்பாக, புதுச்சேரி மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு ஆய்வு நடத்தினோம்.
ரத்தமாதிரிகள் கடந்த ஆகஸ்ட் 11 முதல் 16 வரை சேகரிக்கப்பட்டது. ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பான்களின் (sero survey) அளவு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனைகள் 'இம்யூனோ அசே' முறையில் செய்யப்பட்டது. பரிசோதனைக்கு 'எலெக்ஸிஸ் ஆன்டி-சார்ஸ் கோவி' நுகர்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.
பரிசோதிக்கப்பட்ட 869 பேரில் 43 பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பான்கள் இருந்தது. கிராமப்பகுதியில் வசிப்போரை விட நகரப்பகுதியில் வசிப்போருக்கு அதிகளவில் நோய் எதிர்ப்பான் இருந்தது. இதன் வேறுபாடு 3.1 சதவீதம். அதேபோல் ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பான்கள் அதிகம் இருந்தது. இதன் வேறுபாடு 3.6 சதவீதம்.
இந்த ஆய்வில் ஜூலை மாத கடைசி வாரத்தில் (ஜூலை 24 முதல் 30 வரை) இருந்த கிருமி தொற்றை விட ஆகஸ்ட் நடுவாரத்தில் 26 மடங்கு அளவுக்கு அதிகமானோர் தொற்றால் பாதிப்புக்கு ஆளானது கண்டறியப்பட்டது"
இவ்வாறு ஆய்வு முடிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.