

கரோனா ஊரடங்கு தளர்வு அறிவித்தும் மதுரை மாட்டுத் தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை. பொதுப் போக்குவரத்துத் தொடங்கிய நிலையிலும் சாலையோரங்களில் செயல்படும் 50 சதவீத காய்கறிக் கடைகளால் நெரிசல் ஏற்படுகிறது.
மதுரையில் கரோனா தொற்று பரவலால் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட்கள், சுற்றுலாத் தலங் கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மூடப்பட்டிருந்தன. இதில், தென் தமிழகத்தில் முக்கி யத்துவம் வாய்ந்த மதுரை மாட்டுத் தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. இந்த மார்க்கெட்டில் செயல்பட்ட 450-க்கும் மேற்பட்ட கடைகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலை யம், ரேஸ்கோர்ஸ் சாலை, சர்வேயர் காலனி 120 அடி சாலை உட்பட நகரில் ஆங்காங்கே சாலைகளில் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
கரோனா ஊரடங்கு தளர்வால் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 50 சதவீத காய்கறிக் கடைகள் இன்னும் சாலைகளில் திறந்தவெளியில் செயல்படுகின்றன. இந்தக் கடை வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
கரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் நகரில் பொதுப் போக்குவரத்து தொடங்கி உள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 100 சதவீத பணியாளர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாகி நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘மார்க்கெட் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், வியாபாரிகள் பலரும் இன்னும் வரவில்லை. அவர்களும் வந்தால் முழுமையாக மார்க்கெட் செயல்படத் தொடங்கிவிடும்’’ என்றார்.