

தமிழகத்தில் ஊரடங்கால் பள்ளிகள் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. ஆனாலும் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 18 நாட்களில் 1 முதல் 11-ம் வகுப்பு வரை 38,878 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
ஆசிரியர்கள் கிராமங்களுக்குச் சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவர்களை கண்டறிந்து, பெற்றோரிடம் பேசி , மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறைந்த நேரமே பள்ளியைத் திறந்து வைத்திருப்பதால் மாணவர்களை சேர்க்க முடியவில்லை என கிராமப்புற பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசுப் பள்ளிகளில் சேர, மாற்றுச் சான்றிதழ் கோரும் மாணவர்களிடம் தனியார் பள்ளி நிர்வாகம், ரூ. 2 ஆயிரம் கட்டணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திட்டக்குடி காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையே, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வரும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில்,கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இன்றி வரும் மாணவர்களைச் சேர்க்கின்றனர். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் கட்டணத்தைக் கூட அரசு வழங்கவில்லை. மாற்றுச் சான்றிதழ் கேட்போருக்கு கட்டணமின்றி சான்றிதழ் வழங்குகிறோம். ஏதேனும் கல்விக் கட்டண நிலுவை இருந்தால் மட்டுமே அந்தக் கட்டணத்தை கேட்கிறோம்” என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக (emis.tnschools.gov.in) பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு எமிஸ் எண் (EMIS No.) வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப் பதிவை டி.என்.எமிஸ் (tnemis-cel) என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய அந்தந்த பள்ளி தலை மையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியில் இருந்து ஒரு மாணவர் அரசுப் பள்ளிக்கு மாற தற்போதைய நிலையில் இந்த எமிஸ் எண் மிக அவசியம். இதைத் தனியார் பள்ளிகள் தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மாற்றுச் சான்றுக்கான கட்டணம் ரூ. 2 ஆயிரத்தை அளிக்கும் போது இந்த எண்ணைத் தருவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தெரியாமலேயே குறிப்பிட்ட மாணவரின் எமிஸ் எண்ணை அரசு பள்ளி, அரசு சார் பள்ளி நிர்வாகத்தினர் எடுத்து விடுவதாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது, “ மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளும் காலை 9 முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். கிராமப் பகுதிகளில் பள்ளி மூடப்பட்டிருந்தால், அந்த ஆசிரியர்கள், மாணவர் சேர்க் கைக்காக தங்கள் பகுதிகுட்பட்ட கிராமங்களுக்கு சென்றிருக்கக் கூடும். தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிப்பதாக எந்தத் தகவலும் இல்லை” என்று தெரிவித்தார்.