Last Updated : 04 Sep, 2020 11:34 AM

 

Published : 04 Sep 2020 11:34 AM
Last Updated : 04 Sep 2020 11:34 AM

ஊரடங்கு தளர்வுக்காக காத்திருக்கும் கன்னியாகுமரி: வளர்ச்சிப் பணிகள் நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் தயார்

சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நிறைவுபெற்று, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கன்னியாகுமரி, ஊரடங்கு தளர்வுக்காக காத்திருக்கிறது.

மத்திய அரசின் ரூ.9 கோடி நிதியில், கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் இருந்து சூரிய அஸ்தமன மையம் வரையுள்ள கடற்கரை பகுதிகளை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஏற்கெனவே விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய படகுகள் இயக்கப்படுகின்றன.

சீஸன் நேரத்தில் அதிகபட்சமாக 17 ஆயிரம் சுற்றுலா பயணி களுக்கு மேல் படகு பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

எனவே, மேலும் இரு அதிநவீன படகுகள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கோவாவில் தயார் செய்யப்பட்டன. இவற்றில் ஒரு படகுகன்னியாகுமரிக்கு வந்துவிட்டது. மேலும் ஒரு படகு விரைவில் வரவுள்ளது. படகு தளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் இருந்து, விவேகானந்தர் பாறை வரை, ரோப் கார்சேவைக்கான பணி விரைவில் தொடங்கவுள்ளது.

கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 5 மாதங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேநேரம் ஊரடங்கை பயன்படுத்தி கன்னியாகுமரியை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு கைப்பிடிச் சுவருடன் கூடியபடித்துறை கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. சூரிய உதயத்தை அமர்ந்து பார்க்க வசதியாக, சுனாமி பூங்கா அருகே பிரம்மாண்ட காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் அமர்ந்து சூரிய உதயத்தைக் காணமுடியும். காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகியவை சீரமைக்கப்பட்டு, புதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சூரிய அஸ்தமன மையம் வரை உள்ள கடற்கரையில் தள ஓடுகள் பதிக்கப்பட்டு, நிழற்குடைகள், இருக்கைகள், சூரிய ஒளிமின்விளக்குகளுடன் காட்சியளிக்கிறது. ஊரடங்கில் இருந்து சுற்றுலா மையங்களுக்கு எப்போது அனுமதிகிடைக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து சுற்றுலாத்துறையினர் கூறியதாவது: ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை என்றாலும், அதை பயன்படுத்தி சர்வதேச தரத்தில்கன்னியாகுமரி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கும் போது, கன்னியாகுமரியை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மக்கள் பார்ப்பார்கள், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x