Published : 04 Sep 2020 11:05 AM
Last Updated : 04 Sep 2020 11:05 AM

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி; வைகோ வாழ்த்து

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (செப். 4) வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி:

"நாட்டின் உயர்வுக்கும் சமூகத்தின் மேன்மைக்கும் அடித்தளமாகத் திகழ்வது கல்வியைப் புகட்டும் ஆசிரியர்கள்தான்.

ஆசிரியர் பணியின் மதிப்பு என்பது ஆழ்கடலைப் போன்று அளவிட முடியாதது. நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, தியாக சீலர்களாக அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள்.

கல்வி மட்டுமே அனைவரையும் கரை சேர்க்கும். எனவேதான் ஆசிரியர் சமூகத்திற்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பதில் மக்கள் பேருவகை கொள்கின்றனர்.

அப்படிப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து தனது அறிவு, ஆற்றல், உழைப்பால் இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவமேதை ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5 ஆம் நாளை, 1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

மாறிவரும் உலகமயச் சூழலில், கல்வி வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வரும் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது.

சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் வித்திடும் சிறந்த பணி ஆசிரியர் பணி.

பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு மதிமுக சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x