Published : 04 Sep 2020 10:52 AM
Last Updated : 04 Sep 2020 10:52 AM

ஆசிரியர் நாள் வாழ்த்து: அறியாமை இருள் விலக்கி அறிவு ஒளியை நிரப்ப ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

அறியாமை இருள் விலக்கி அறிவு ஒளியை நிரப்ப ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 4) வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

"அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளமாக திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாளான செப். 5-ம் நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர் அறையில் விலைமதிப்பு மிக்க எந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட, சிறிய விளக்கு ஒளி மட்டும் இருந்து விட்டால், அது அந்த அறையையே நிறைத்து விடும். அதேபோல், ஒரு நாட்டில் எந்த வளவும் இல்லாவிட்டாலும் கூட கல்வியும், மனிதவளமும் மட்டும் நிறைந்திருந்தால், அந்த நாட்டுக்கு மீதமுள்ள அனைத்து வளங்களும் கிடைத்து விடும். கல்வியின் சிறப்பு அந்த அளவுக்கு மகிமையானது. கல்விக்கு அம்மகிமையை வழங்குபவர்கள் கல்வி தரும் வள்ளல்களான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தான்.

உலகே கரோனா அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. கரோனாவால் ஏற்பட்ட அத்தனை பாதிப்புகளையும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் உலகம், இழந்த கல்வியை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் மாற்று இல்லாதவர்கள்; அவர்களின் சேவையை எவராலும் ஈடு செய்து விட முடியாது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.

ஆசிரியர்களும் தங்களின் இந்த வலிமையை உணர்ந்து கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். அறியாமை இருளை விலக்கி, அறிவு ஒளியை தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்ய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அதேநேரத்தில் அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆசிரியர்களின் உதவியுடன், அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகத்தை அகிலத்தில் சிறந்த நாடாக உயர்த்த பாடுபடுவதற்கு ஆசிரியர்கள் நாளாகிய இந்த நல்ல நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x