

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குளம், குட்டைகள் மற்றும் வயல்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. தருமபுரி கடகத்தூர் அருகே தாளநத்தம் கிராமத்தில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர்.
மழை அளவு
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு காலை நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 237 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 29 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 92 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 13.2 மிமீ மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாரூரில் 60 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல் சூளகிரி - 59, தேன்கனிக்கோட்டை- 51, போச்சம்பள்ளி-46.20, பெனு கொண்டாபுரம்-41.20, தளி- 35, ஓசூர்-32, அஞ்செட்டி, நெடுங்கல்லில்-30.60, ஊத்தங்கரை- 25, ராயக்கோட்டை- 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தருமபுரி -55, பாலக்கோடு- 40, மாரண்டஅள்ளி- 23.2, பென்னாகரம்-45, ஒகேனக்கல்-35, அரூர்-33. பாப்பி ரெட்டிப்பட்டி- 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
காலை 9 மணி வரை பனி
ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள அஞ்செட்டி தொட்டல்லா காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல வனத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் மானாவாரியில் கேழ்வரகு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. நகரப்பகுதியில் சூடான தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்த மழையினால் காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடித்தது.