ஆசிரியர் தினம்: அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றுபவர்கள்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள் 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று தெய்வநிலைக்கு ஒப்பானவர்கள் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 4) வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி:

"கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி, தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை எஸ்.ராதாகிருஷ்ணனை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஒளவையார், உடலுக்குக் கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பினை போற்றுகிறார்.

அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள் 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது', சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவித்து வருகிறது.

நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இந்நன்னாளில் எனது உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in