

ரவுடி சங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற காவல் ஆய்வாளர்உட்பட 7 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரைப் பிடிக்க அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இந்த தனிப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் சங்கரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை அயனாவரம் காவல் நிலைய போலீஸாரே வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டிஜிபி உத்தரவு
அதைத்தொடர்ந்து ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.
சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
விளக்கம் அளிக்க வேண்டும்
முதல்கட்டமாக சங்கரை சுட்டுக்கொன்ற காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் தனிப்படை போலீஸார் எனமொத்தம் 7 பேருக்கு சிபிசிஐடிபோலீஸார் சம்மன் அனுப்பிஉள்ளனர். வரும் 7-ம் தேதி எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 7 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி சம்மனில் கூறப்பட்டுள்ளது.