Published : 04 Sep 2020 07:56 AM
Last Updated : 04 Sep 2020 07:56 AM

வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி

நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனாதொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளைத் தொடர்ந்து தற்போது நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் ஆணையர் மோகன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து எப்எல் 2 உரிமம் பெற்ற கிளப்புகள், எப்எல்3 உரிமம் பெற்ற நட்சத்திர ஓட்டல்கள், எப்எல் 3 ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் எப்எல் 10 உரிமம் பெற்ற விமான நிலையங்களில் உள்ள ஓட்டல்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மதுக்கூடங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. கலால் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் மூலம் ஆய்வு நடத்தி வழிகாட்டு நெறிமுறைப்படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ஆணையர் மோகன் கூறியுள்ளார்.

சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், ‘‘மதுக்கூடங்கள் நடத்த உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப்புகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது, இசை கச்சேரி, நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை நீடிக்கிறது. மது அருந்த வருபவர்கள், ஊழியர்களின் உடல் வெப்ப அளவை பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டு்ம்.

மது அருந்த வருபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், காய்ச்சல் மற்றும் பிறஅறிகுறிகள் இருப்பவர்களை அனுமதிக்க கூடாது. மதுக்கூடங்களில் 50 சதவீதத்துக்குள் இருக்கைகள் பயன்படுத்த வேண்டும். கையில்பணம் வாங்குவதை தவிர்த்துஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும். 50சதவீதத்துக்கும் மேல் இயற்கையான காற்றை சுவாசிக்கும் வகையில் மதுக்கூடம் இயங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x