

திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மீது புகார் கொடுக்க அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 200-க்கும் அதிகமான பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக இருப்பவர் அரவிந்த் ரமேஷ். இத்தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான பெண்கள் நேற்று காலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டனர்.
திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு நேற்று வேட்புமனு தாக்கல் நடந்ததால் கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு வந்திருந்தனர். இந்நிலையில், அறிவாலய வளாகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு திரண்ட கண்ணகி நகரைச்சேர்ந்த பெண்கள், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷை கண்டித்து கோஷமிட்டனர். திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்து அவர்களிடம் பேசினர். கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்ததங்களுக்கு தொகுதி எம்எல்ஏவான அரவிந்த் ரமேஷ் எந்த உதவியும் செய்யவில்லை என்று பெண்கள் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய உதவிகள் கிடைக்க வழி செய்வதாகவும்,கரோனா அச்சம் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்த்து திரும்பிச் செல்லுமாறும் நிர்வாகிகள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக அரவிந்த் ரமேஷிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கின்போது தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மிகப்பெரிய அளவில் வழங்கியிருக்கிறோம். திமுக நிர்வாகிகள் தங்களால் முடிந்த அளவுக்கு உதவியுள்ளனர். ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியால் என் மீது புகார் கொடுத்துள்ளனர்’’ என்றார்.