

திமுக பொதுக்குழு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
திமுக பொதுக்குழு கூட்டம்,ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி மூலம் வரும் 9-ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது.
பொதுக்குழு கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், மூத்ததலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என்றுசுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
ஜூம் செயலி மூலம் நடக்கும் பொதுக்குழுவில் 4 ஆயிரம் பேர் இணைவது நடைமுறை சாத்தியமற்றது என்பதால் மாவட்ட அளவில் ஓர் அரங்கத்தை ஏற்பாடு செய்து, அதில் பொதுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து காணொலி காட்சி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘‘பொதுக்குழு கூட்டத்துக்காக மாவட்ட அளவில் அரங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். குறித்த நேரத்தில் அனைவரும் வருவதை உறுதி செய்ய வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற வேண்டும். வழக்கமான பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் ‘பேட்ஜ்’ உட்பட அனைத்தும் வழங்க வேண்டும்.
கரோனா பேரிடர் காலம் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இடைவெளிவிட்டு அமர வேண்டும். சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
காணொலி காட்சி மூலம் பொதுக்குழு நடப்பதால் தொழில்நுட்ப பிரச்சினைகள் வராமல் தடுக்க முன்னேற்பாடுகள், மாற்று ஏற்பாடுகள், மின்சாரம் தடைபட்டால் மாற்று ஏற்பாடுகள் என அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.