Published : 04 Sep 2020 07:29 AM
Last Updated : 04 Sep 2020 07:29 AM

அரை நூற்றாண்டை கடந்த விவேகானந்தர் நினைவு மண்டபம்

கடந்த 1892-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்த சுவாமி விவேகானந்தர், கடலுக்குள் 500 மீட்டர் நீந்திச் சென்று அங்கிருந்த பெரிய பாறையில் 3 நாட்கள் கடும் தவத்தில் இருந்தார்.

அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு ஞானம் வழங்கிய கன்னியாகுமரி பாறையில் நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 1963-ல் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அமைப்புச் செயலாளராக சமூக ஆர்வலர் ஏக்நாத் ரானடே நியமிக்கப்பட்டார்.

அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவி வகித்தார். சில எதிர்ப்புகள் காரணமாக நினைவு மண்டப விவகாரம் அன்றைய பிரதமர் நேரு வரை சென்றது. நினைவு மண்டபம் அமைப்பதற்கு ஆதரவாக 323 எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

புனித தலங்களின் சந்தன கலவை

நேரு ஒப்புதல் அளித்த பிறகு 1964-ல் கன்னியாகுமரி பெரிய பாறையில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தலைமை ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் ஆறே ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1970,செப்டம்பர் 2-ம் தேதி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி திறப்பு விழாவுக்கு தலைமை வகித்தார்.

புரி, துவாரகா, பத்ரிநாத், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனங்களின் கலவையை, நினைவு மண்டப கதவில் வி.வி.கிரி பூசி, நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் வி.வி.கிரி பேசும்போது, "சுவாமி விவேகானந்தர் போதித்த உண்மை, மனிதநேயம், சுயநலமற்ற சேவையை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். அவரது போதனைகள், சிந்தனைகள் முன்னெப்போதும்விட இப்போது மிகவும் முக்கியமானவை. ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். நாட்டுக்கு சுயநலமின்றி சேவையாற்ற வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்தினார். அவரது போதனைகளை நாம் நாள்தோறும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

கடந்த 1970 செப்டம்பர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும் பங்கேற்றனர்.படங்கள் உதவி: ஏ.சங்கரன், ஆர்.சரவணன், இந்து ஆவண காப்பகம்.

ஏழைகளின் சிரிப்பில்...

திறப்பு விழாவில் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.

‘‘சுவாமி விவேகானந்தர் சாமானிய மக்களின் உயர்வு குறித்து மட்டுமே சிந்தித்தார். அவரது உரைகள் நலிவுற்ற மக்களின் நலன்களை வெளிப்படுத்தின. அவருடைய போதனைகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தின. விவேகானந்தரின் அறிவுரைகள் ஒட்டுமொத்த உலகமும் பின்பற்றக்கூடியவை. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில்தான் மனித குலத்தின் முன்னேற்றம் அடங்கி இருக்கிறது என்று அறிஞர் அண்ணா கூறுவார். ஏழைகளின் சிரிப்பில் நாங்கள் இறைவனை காண்கிறோம். ஏழைகளின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்துவதே எங்கள் அரசின் லட்சியம். சாதி, இனம் ஆகிய பேதங்களை அகற்றிவிட்டு இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்" என்று கருணாநிதி பேசினார்.

கடோபநிஷதத்தில் இருந்து விவேகானந்தர் எடுத்துக் கையாண்ட முக்கிய அறிவுரையான ‘உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோதத’ (எழு, விழித்தெழு,இலக்கை அடையும் வரை ஓயாதே!) என்ற வரிகளைச் சொல்லி தனது உரையை முடித்தார் கருணாநிதி.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு செப்.2-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அரை நூற்றாண்டை கடந்தும் நினைவு மண்டபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தலைவர் பதவியில் இருந்து பி.டி.ராஜன் ராஜினாமா

1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மதங்களுக்கான உலக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய எழுச்சிமிக்க உரை சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது. சிகாகோ மாநாட்டுக்கு அவரை அனுப்பி வைத்த ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு, கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் கடந்த 1970-ம் ஆண்டில் அகில இந்திய விவேகானந்தர் நினைவு மண்டப குழுவின் தலைவர் பதவியில் இருந்து சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் நீதிக் கட்சியின் மூத்த தலைவருமான பி.டி.ராஜன் விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “ராமநாதபுரம் மக்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் பதவி விலகுகிறேன்” என்று விளக்கம் அளித்தார்.

மண்டபத்தை வடிவமைத்த தலைமை ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரி

1964-ம் ஆண்டில் கன்னியாகுமரி பெரிய பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. காரைக்குடி அருகே தேவக்கோட்டையை சேர்ந்த எஸ்.கே.ஆச்சாரி தலைமை ஸ்தபதியாக இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.

முதலில் 6 சிற்பிகளுடன் கட்டுமானப் பணி தொடங்கியது. பின்னர் 400-க்கும் மேற்பட்ட சிற்பிகள் இரவும் பகலும் பணியாற்றி கட்டுமான பணிகளை விரைவுபடுத்தினர். அம்பாசமுத்திரத்தில் இருந்து புளு கிரானைட்டும் தூத்துக்குடி பகுதியில் இருந்து ரெட் கிரானைட் கற் களும் கொண்டு வரப்பட்டன. நினைவு மண்டபத்துக்காக 6 ஆயிரம் டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விவேகானந்தர் நினைவு மண்டபம் மட்டுமன்றி, திருவண்ணாமலை ரமண மகரிஷி சமாதி மண்டபம், திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் உள்ளிட்ட புண்ணிய தலங்களை எஸ்.கே.ஆச்சாரி கட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x