

இந்து குழும நிறுவனங்களை உள்ளடக்கிய கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக என்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியராக அவர் இருந்துள்ளார். தற்போது குழுமம் வெளியிடும் பல்வேறு செய்தி பத்திரிகைகளின் பதிப்பாளராக உள்ளார். இதற்கு முன் தலைவராக இருந்த என்.முரளியைத் தொடர்ந்து அவர் இப்பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் குழு கூட்டத்தில் நிறுவனத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த என்.முரளியின் சேவை வெகுவாக பாராட்டப்பட்டது. புதிதாக பல துணை நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் செயல்பாடுகள் மேம்பட மிகச் சிறப்பான பங்களிப்பை என்.முரளி அளித்துள்ளார் என்றும் இயக்குநர் குழு பாராட்டியுள்ளது. நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த உத்திகளில் கடந்த 50 ஆண்டுகளாக மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தி இந்து குழுமம் மூலம் தி இந்து, பிசினஸ் லைன், பிரன்ட்லைன், ஸ்போர்ட் ஸ்டார் உள்ளிட்டவையும் கேஎஸ்எல் மீடியா மூலம் இந்து தமிழ் திசை நாளிதழும், கேஎஸ்எல் டிஜிட்டல் வெஞ்சர்ஸ் மூலம் டிஜிட்டல் ரியல் எஸ்டேட் தளமான ரூஃப்அண்ட் புளோர்.காம் மற்றும் ஸ்போர்டிங் பாஸ்டைம் மூலம் ரிசார்ட் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.