

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் தென்மண்டல ஐ.ஜி. முருகன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி, தென்காசியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக 64 போலீஸ் நிலையங்கள் இருந்தன.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 38 போலீஸ் நிலையங்களும், தென்காசி மாவட்டத்தில் 26 போலீஸ் நிலையங்களும் தற்போது உள்ளன.
இந்நிலையில் திருநெல்வேலிக்கு இன்று வந்த தென்மண்டல ஐஜி முருகன் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்திலுள்ள திருமண மண்டபத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
பொதுமக்களிடம் போலீஸார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, திருநெல்வேலி எஸ்.பி. மணிவண்ணன், திருநெல்வேலி தலைமையிட ஏடிஎஸ்பி சுப்பாராஜு, சேரன்மகாதேவி ஏஎஸ்பி பிரதீப், டிஎஸ்பிக்கள் பிரான்சிஸ், உதயசூரியன், அர்ச்சனா, ஷ்ரிலிசா ஸ்டெபில்லா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சுப்பணியாளர்கள், போலீஸாருக்கு நற்சான்றிதழ்களை ஐஜி வழங்கினார். தொடர்ந்து அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் போலீஸாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.